அசாம் மாநிலத்தின் ஹோஜாய் (Hojai) மாவட்டத்தில் இன்று (20.12.2025) அதிகாலை நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், சைராங் – புது தில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் எட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விபத்தின் தாக்கத்தால் ரயிலின் ஐந்து பெட்டிகள் மற்றும் இன்ஜின் தடம் புரண்டன.
அசாம் மாநிலத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த சோகம்
இன்று அதிகாலை சுமார் 2:17 மணியளவில், ஹோஜாய் மாவட்டத்தின் சங்ஜுராய் (Changjurai) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜமுனாமுக் மற்றும் காம்பூர் இரயில் நிலையங்களுக்கு இடையே யானைகள் கூட்டமாக தண்டவாளத்தைக் கடந்தபோது, வேகமாக வந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் அவற்றின் மீது மோதியது.
ரயில் தடம் புரண்டது; பயணிகள் நிலை?
வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே செய்தித் தொடர்பாளர் அளித்த தகவலின்படி: விபத்தில் ரயிலின் இன்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. நல்வாய்ப்பாக ரயிலில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்தை அடுத்து அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மற்ற ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
வனத்துறை மற்றும் ரயில்வே நடவடிக்கை
விபத்து நடந்த இடத்திற்கு நாகோன் கோட்ட வன அதிகாரி சுபாஷ் கடம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய யானைகளின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், காயமடைந்த ஒரு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மிசோரம் மாநிலம் சைராங்கில் இருந்து தில்லி ஆனந்த் விகார் முனையம் நோக்கிச் சென்ற இந்த ரயில், அதிவேகமாக வந்தபோது ஓட்டுநர் அவசர கால பிரேக்குகளைப் பயன்படுத்தியும் விபத்தைத் தவிர்க்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ா
யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எனன?
அசாம் போன்ற மாநிலங்களில் யானைகளின் வழித்தடங்களில் ரயில் தண்டவாளங்கள் அமைந்திருப்பது தொடர்ச்சியான கவலைக்குரிய விஷயமாக உள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வனப்பகுதி வேகக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இது போன்ற உயிரிழப்புகள் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. யானைகளைப் பாதுகாக்க இன்னும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
