Skip to content

அஜித் பவார் விமான விபத்து; விமான போக்குவரத்து அமைச்சரை நீக்கக் கோரி பிரதமர் மோடிக்கு ரோகித் பவார் கடிதம்!

மும்பை,பிப்.21; மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மறைவுக்குக் காரணமான விமான விபத்தில் சதித் திட்டம் இருப்பதாகக் கூறி, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை பதவியில் இருந்து நீக்கக் கோரி ரோகித் பவார் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அஜித் பவார் மரணத்தில் மர்மம்?

தேசியவாத காங்கிரஸ் (NCP-SP) கட்சியின் எம்.எல்.ஏ ரோகித் பவார், இன்று (21.02.2026) பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த மாதம் பார்மதியில் நேரிட்ட விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். இந்த விபத்து ஒரு திட்டமிடப்பட்ட சதி என்று ரோகித் பவார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய ‘வி.எஸ்.ஆர்’ (VSR) ஏர் சார்ட்டர் நிறுவனத்திற்கும், தற்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடுவின் கட்சிக்கும் (TDP) நெருங்கிய தொடர்பு இருப்பதாக ரோகித் பவார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமான விசாரணைக்கு கோரிக்கை

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரோகித் பவார், இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், அமைச்சர் ராம்மோகன் நாயுடு உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வி.எஸ்.ஆர் நிறுவனத்தில் அரசியல் மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க நபர்கள் முதலீடு செய்துள்ளனர்; எனவே, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த விசாரணையை நடுநிலையோடு நடத்துமா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது; சர்வதேச ஏஜென்சிகளின் உதவியுடன் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று ரோகித் பவார் வலியுறுத்தி உள்ளார்.

விபத்தின் பின்னணி

ஜனவரி 28, 2026 அன்று பார்மதி விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. ஓடுதளத்திற்கு மிக அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தின் கருப்புப்பெட்டி (Black Box) சேதமடைந்திருப்பது விசாரணையில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் பவார் மரணம்; சதி குற்றச்சாட்டால் மத்திய அரசுக்கு நெருக்கடி

அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் எழுப்பியுள்ள இந்த ‘சதி’ குற்றச்சாட்டு மத்திய அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இந்தக் கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *