சென்னை, மார்ச்.24; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 24, செவ்வாய்) வெளியிட்டுள்ளார். இதில் பெண்களையும், சாமானிய மக்களையும் கவரும் வகையில் பல “மெகா” அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அதிமுக ஏற்கனவே 3 கட்டங்களாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதன் தொடர்ச்சியாக முழுமையான தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு இலவச ‘பிரிட்ஜ்’ மற்றும் நிதியுதவி
அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமான அம்சமாக, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு இலவச பிரிட்ஜ் (குளிர்சாதன பெட்டி) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மிக்சி, கிரைண்டர் திட்டங்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு குல விளக்கு திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ. 2,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ. 10,000 உதவி
தற்போதுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வரி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை வழங்கப்படும் நிவாரணமாக ரூ. 10,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் எரிவாயு சலுகைகள்
பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், இனி ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் வழங்கப்படும் என்பதும் நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவி: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 2,000 மற்றும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
297 வாக்குறுதிகளுடன் கூடிய அதிமுகவின் தேர்தல் அறிக்கை
அதிமுக வெளியிட்டுள்ள 297 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை, தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. குறிப்பாக இலவச பிரிட்ஜ் மற்றும் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் போன்ற அறிவிப்புகள் சாமானிய மக்களின் வாக்குகளை கவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகள் அதிமுகவிற்கு மீண்டும் ஆட்சிக் கட்டிலை பெற்றுத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம
