சென்னை,பிப்.25; தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. அதிமுக-பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக (அன்புமணி அணி, அமமுக, தமாகா மற்றும் சில சிறிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணியில் அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று பேசப்படுகிறது.
அதிமுகவிடம் கூடுதல் தொகுதிகளைப்பெற பாஜக தீவிரம்
அதிமுகவிடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் கிட்டத்தட்ட 80 இடங்களில் பாஜக 2ஆம் இடம் பிடித்திருந்தது.
இந்த 80 இடங்களில் 72 தொகுதிகளை தேர்வு செய்து பாஜக பட்டியல் தயார் செய்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதிலிருந்து 35 தொகுதிகளை கண்டிப்பாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தி வருகிறது.
பாஜகவுக்கு 35, அமமுகவுக்கு 6 தொகுதிகளா?
இதனிடையே, பாஜகவுக்கு 35, அமமுகவுக்கு 6 என்ற அடிப்படையில் அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதுபோன்ற சூழலில், நாளை (பிப்ரவரி 26, வியாழன்) தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுகிறார். அப்போது பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகும் எனத் தெரிகிறது.
அதிமுக-பாஜக தொகுதிப்பங்கீடு பேச்சு; மா.கம்யூனிஸ்ட் கிண்டல்
இந்நிலையில், அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில், கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என்று இபிஎஸ் கூறிக் கொண்டிருக்கிறார்; ஆனால் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் பாஜகவுடன் தான் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவோம் என்று கூறுகின்றனர்; இதனை பாஜகவும் மறுக்கவில்லை; போகின்ற போக்கைப் பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போல் தெரிகிறது என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் யோசிக்க வேண்டும்: சண்முகம்
மோடியா? அல்லது இந்த லேடியா? என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
