சென்னை,ஜன.22; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக மற்றும் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
கூட்டணி, தொகுதிப் பங்கீடு மும்முரம்
அதேவேளையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது, தொகுதிப்பங்கீடு,தேர்தல் அறிக்கை தயாரித்தல், வேட்பாளர்கள் தேர்வு போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, அமமுக, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் தேமுதிகவையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மோடியின் கூட்டம்; கூட்டணி கட்சித் தலைவர்களை மேடையேற்ற முனைப்பு
சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் நாளை (23.01.2026) மதியம் நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் ஏற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என முடிவாகவில்லை?
கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இதுவரை முடிவாகவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேவேளையில், பாமகவுக்கு 19 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், அமமுகவுக்கு 9 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவாகிவிட்டன?
ஜி.கே.வாசனின் தமாகாவிற்கு 4 தொகுதிகளும், புரட்சி பாரதம், புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி 2 மற்றும் ஜான் பாண்டியனின் கட்சிக்கு தலா இரண்டு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அதிமுகவைப் பொறுத்தவரையில் குறைந்தது 170 முதல் 180 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
