தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், கட்சிகள் அதற்கு தயாராகும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று (23.12.2025) சென்னை வந்தார். அவர் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டணி குறித்து ஒன்றரை மணிநேரம் பேச்சுவார்த்தை
இந்நிலையில், சென்னை லீலா பேலசில் பியூஷ் கோயலை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது பாஜக சார்பில், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.
இதுபற்றி எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது? என்பது குறித்து ஆலோசித்தோம் என்று தெரிவித்தார்.
எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? பேசிவிட்டதாக தகவல்!
இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக பியூஷ் கோயலிடம் எடப்பாடி பழனிசாமி பட்டியல் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பட்டியலில், அ.தி.மு.க. 170, பா.ஜ.க. 23, பா.ம.க. 23, மற்றவை 18 தொகுதிகளில் போட்டியிடும் என்பதற்கான விவரங்கள் உள்ளன என கூறப்படுகிறத
பாமக, தேமுதிகவிடம் நாங்கள் பேசுகிறோம்:அதிமுக தரப்பு
கூட்டணி தொடர்பாக பாமக மற்றும் தேமுதிகவிடம் தாங்களே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்கிறோம் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளட்டும் எனக்கூறியுள்னளர். தைத்திங்கள் திருநாள் முடிந்தவுடன் தொகுதிப் பங்கீடு விவரங்கள் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.
