சென்னை,பிப்.27; தமிழ்நாடு அரசியலில் பெரும் திருப்பமாக, முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 27) திமுகவில் இணைந்தார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் இருந்து விலகல் முதல் திமுக பயணம் வரை
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு” என்ற பெயரில் தனி இயக்கம் நடத்தி வந்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை மீட்க சட்டப் போராட்டங்களை நடத்தினார்.
இருப்பினும், மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாக திமுகவை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் பலர் ஏற்கனவே திமுகவில் ஐக்கியம்
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல. கடந்த சில வாரங்களாகவே அவரது நெருங்கிய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். இதுவே ஓபிஎஸ் அவர்களின் திமுக வருகைக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டது.
தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள்
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி சார்பில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர், வேறொரு கட்சியில் இணைந்திருப்பது இதுவே முதல்முறையாகும். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது வரலாற்றில் பதிவானது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஓபிஎஸ் போன்ற ஒரு மூத்த தலைவர் ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ஒரு தலைவர் திமுக பக்கம் சாய்ந்திருப்பது, வரவிருக்கும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார், இதுதானா அது…?
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி கூறி வந்த நிலையில், தற்போது அவரது அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஒருவர் ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
