Skip to content

அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே திமுகவில் ஐக்கியம்; மாணிக்க ராஜா கூறும் காரணம் என்ன?

சென்னை,ஜன.23; அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட S.V.S.P. மாணிக்க ராஜா, சிறிது நேரத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

கூட்டணி, தொகுதிப்பங்கீடு என கட்சிகள் தீவிரம்

கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காணுதல் போன்றவற்றில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரையில், முந்தைய தேர்தலில் இடம்பெற்றிருந்த அதேகட்சிகள் கூட்டணியில் தொடர்கின்றன.

அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்ததால் சிலர் அதிருப்தி

எடப்பாடியை தீவிரமாக எதிர்த்துவந்த டிடிவி தினகரனின் அமமுக, சில தினங்களுக்கு முன்னர், அதிமுக-பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. “விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை” என அப்போது தினகரன் விளக்கமளித்திருந்தார்.

இதனை அமமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மாணிக்கராஜா உள்ளிட்ட சில நிர்வாகிகள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர்.

அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா

இதுபோன்ற சூழலில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக, அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் இன்று(23.01.2026) காலை அதிரடியாக அறிவித்தார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அன்வர்ராஜா, மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், மைத்ரேயன், வைத்திலிங்கம் என அடுத்தடுத்து பலர் திமுகவில் இணைந்த நிலையில், மாணிக்க ராஜாவும் திமுகவில் தான் இணையப் போகிறார் என அரசியல் வட்டாரத்தில் தீயாக செய்தி பரவியது.

மாணிக்க ராஜாவும் திமுகவில் ஐக்கியம்

இதனை உறுதி செய்யும் வகையில், மாணிக்க ராஜாவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அமருவான் மாவட்டச் செயலாளர்கள் மூவர் உள்ளிட்ட பலர் திமுகவில் சேர்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்க ராஜா, அமமுக என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அதை மறந்து அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருவதாக மாணிக்க ராஜா பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *