Skip to content

அமெரிக்காவை உலுக்கும் ‘ராட்சத’ பனிப்புயல்; முற்றிலும் முடங்கியது மக்களின் இயல்பு வாழ்க்கை!

டெக்சாஸ், ஜன.25; அமெரிக்காவின் பெரும் பகுதியை ஒரு பயங்கர பனிப்புயல் (Monster Winter Storm) தாக்கி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மற்றும் மின்சாரம் என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பனிப்புயலால் 24 கோடி மக்கள் பாதிப்பு

இந்த கடுமையான பனிப்புயலால் சுமார் 240 மில்லியன் (24 கோடி) அமெரிக்கர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று அமெரிக்கப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் சீன் டஃபி (Sean Duffy)எச்சரித்துள்ளார். இது அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான எண்ணிக்கையாகும். மெக்சிகோ முதல் மெய்ன் (Maine) வரை நீண்டுள்ள இந்த பனிப்புயல் காரணமாக சுமார் 16 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முடங்கிய விமானப் போக்குவரத்து மற்றும் மின்சாரம்

புயல் காரணமாக நாளை வரை திங்கட்கிழமை (26.01.2026) வரை 14,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது விமான பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெக்சாஸ் மற்றும் லூசியானா போன்ற மாநிலங்களில் கடுமையான பனி மற்றும் மழையால் மின்கம்பிகள் பாதிக்கப்பட்டு, சுமார் 1,30,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

நியூயார்க் மற்றும் பிற நகரங்களின் நிலைமை

நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் (Kathy Hochul) மாநிலத்தில் அவசர நிலையை அறிவித்துள்ளார். “வெளியே செல்வது உயிருக்கு ஆபத்தானது” என்று அவர் எச்சரித்துள்ளார். நியூயார்க் நகரில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனிலும் நாளை (26.01.2026) அரசு அலுவலகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மக்கள் பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) அத்தியாவசியப் பொருட்களை வாங்கக் குவிந்தனர். இதனால் பால், முட்டை மற்றும் ரொட்டி போன்ற பொருட்களின் அலமாரிகள் காலியாகின. சாலையோரங்களில் பல அடி உயரத்திற்குப் பனி தேங்கியுள்ளதால், வாகனப் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது.

பனிப்பொழிவு அடுத்தவாரம் வரை நீடிக்கலாம்

இந்த கடுமையான பனிப்பொழிவு அடுத்த வாரம் வரை நீடிக்கலாம் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NWS) தெரிவித்துள்ளது. பனி உறைந்து சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றமே இத்தகைய தீவிரமான வானிலை மாற்றங்களுக்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *