Skip to content

அயதுல்லா அலி கமெனி பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் தகவல்! விரைவில் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்றும் அறிவிப்பு!

டெஹ்ரான்,மார்ச்.01; ஈரானிய அரசியலில் கடந்த சில மணிநேரங்களாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி (Ayatollah Ali Khamenei) வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஈரான் அரசு தற்போது ஒரு முக்கிய நகர்வை மேற்கொண்டுள்ளது.

அயதுல்லா அலி கமேனி பற்றிய தகவல்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள முக்கிய இலக்குகள் மீது நடத்திய தாக்குதலில், கமெனியின் இல்லமும் இலக்கு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, அவர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் காட்டுத்தீயாக பரவின. அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், அமெரிக்க அதிபர் டிரம்பும் அறிவித்தனர். இஸ்ரேலிய ஊடகங்கள் சிலவும் இதற்கு வலுசேர்க்கும் வகையில் செய்திகளை வெளியிட்டன.

ஈரானின் அதிகாரப்பூர்வ விளக்கம்

இந்த தகவல்களை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi), “எங்களுக்கு தெரிந்தவரை உச்ச தலைவர் கமெனி மற்றும் இதர உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாகவும், உயிருடனும் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் தலைமைப்பொறுப்பு எவ்வித இடையூறுமின்றி செயல்பட்டு வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

விரைவில் மக்களிடையே உரையாற்றுவார் கமெனி?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கமெனி விரைவில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக ஈரானின் அரசு ஊடகமான ‘அல்-ஆலம்’ (Al-Alam TV) தெரிவித்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலுக்கு ஈரான் அளிக்கும் முதல் நேரடிப் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. தனது இருப்பை உறுதிப்படுத்துவதன் மூலம், ஈரானிய ராணுவம் மற்றும் மக்களின் மன உறுதியை நிலைநாட்ட கமெனி திட்டமிட்டுள்ளார்.

பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தாக்குதல் ஈரானிய மக்களுக்கு “சுதந்திரத்தை” பெற்றுத்தரும் ஒரு முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணைகளை இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஏவி வருவதால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

அயத்துல்லா அலி கமேனி பற்றிய செய்திகள் உண்மையா? வதந்தியா?

அயதுல்லா அலி கமெனி குறித்த செய்திகள் தற்போதைக்கு வெறும் வதந்திகளாகவே பார்க்கப்படுகின்றன. எனினும், அவர் பொதுவெளியில் தோன்றி உரையாற்றினால் மட்டுமே சர்வதேச சமூகத்தின் சந்தேகம் முழுமையாகத் தீரும். தற்போதைய சூழலில், ஈரானின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உலக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *