சென்னை,ஜன.20; 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (20.01.2026) தொடங்கியது.
4ஆவது ஆண்டாக உரையை புறக்கணித்த ஆளுநர் ரவி
அவையில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாபாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து. 4-வது ஆண்டாக அவர் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவையில் சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார்.
பேரவையில் நடந்தது என்ன? சபாநாயகர் விளக்கம்
பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல-ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம் எனக் குறிப்பிட்டார்.
ஆளுநர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும்; நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை இப்படி செய்வார்களா..? தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்படுவது மரபு, இது ஒருபோதும் மாற்றப்படாது என சபாநாயகர் விளக்கமளித்தார்.
சபாநாயகர் பேசும்போது மைக் அணைக்கப்படுவது வழக்கம்
சபாநாயகர் பேசும் போது பேரவையில் மற்றவர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கம்தான்- தயவு செய்து உங்கள் கடமையை செய்யுங்கள் என்று மட்டும்தான் ஆளுநரிடம் கூறினேன் – அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை – ஜனநாயக கடமையை பின்பற்றி ஆளுநருக்கு அழைப்பு விடுத்திருந்தோம் என்றும் அப்பாவு கூறினார்.
நாளை (21.01.2026) முன்னாள் எம்.எல்.ஏக்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அப்பாவு, 22,23ஆம் தேதிகளில் பேரவைக் கூட்டம் முழுமையாக நடைபெறும், ஆளுநர் உரை மீது விவாதம் நடக்கும். 24-ஆம் தேதி முதலமைச்சர் அதற்கு பதிலளிப்பார் என சபாநாயகர் தெரிவித்தார்.
