Skip to content

அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்: மதுரை ஆர்ப்பாட்டத்தில் விஜய்யை மறைமுகமாக சாடிய வைகோ

மதுரை, மார்ச்.15: தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்காத மத்திய அரசுக்கு எதிராகவும், சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்தும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில், மதுரை முனிச்சாலை சந்திப்பில் இன்று (மார்ச் 15, ஞாயிறு) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ. தளபதி தலைமை வகித்தார். பூமிநாதன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நல்லமணி, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் கணேசன், மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் விசிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

எரிவாயு சிலிண்டர் நின்றுவிடுமோ என மக்கள் கலக்கம்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்றைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் அடியோடு நின்று போய்விடுமோ என்ற மனக்கலக்கத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர்; இனிமேல் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட முடியுமா என்ற கவலை வாட்டுகிறது; படித்துவிட்டு வளைகுடா நாடுகளுக்கு சென்று அங்கே கிடைக்கும் ஊதியத்தை பெற்றோருக்கு அனுப்பும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாக உள்ளது என்று கவலை தெரிவித்தார்.

மக்களின் மனத்துயரத்துக்கு காரணம் டொனால்டு டிரம்ப்

இவ்வளவு மனத்துயரத்துக்கும் காரணம் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள்ளே நுழைந்து அதிபர் நாற்காலியிலே ஹிட்லரின் மறு உருவமாக உட்கார்ந்துள்ள டொனால்டு டிரம்ப் தான் என்று வைகோ சாடினார். அமெரிக்க நாட்டின் ஜனநாயகவாதிகள் ஒன்று சேர்ந்து அவரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் வைகோ பேசினார்.

இந்தியர்களின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார் பிரதமர் மோடி

ரஷ்யாவிலே இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதித்ததாக சொல்வது கேவலம்-ரஷ்யாவிலே கச்சா எண்ணெய் வாங்க டிரம்ப் அனுமதி கொடுப்பதற்கு அவர் யார்?. இந்தியா அமெரிக்காவின் கொத்தடிமையா?. 140 கோடி மக்களின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார் பிரதமர் மோடி என்று வைகோ கடுமையாகப் பேசினார்.

இச்சூழலில் இந்தியாவில் இருக்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து மோடி அரசையும், அவரது கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மோடி மற்றும் கூட்டாளிகளுக்கு பாடம் புகட்ட சரியான வாய்ப்பு

இந்தியர்களுக்கு துன்பம் இழைக்கும் முதல் குற்றவாளி பிரதமர் மோடி., கூட்டு குற்றவாளி அதிமுக மற்றும் அதிலுள்ள கட்சிகள். இவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். இதற்கான சரியான சந்தர்ப்பம் தான் தேர்தல். இந்த ஜனநாயக யுத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை படுதோல்வி அடைய செய்யவேண்டும். அவர்களுக்கு டெபாசிட் மிஞ்சக்கூடாது. இதற்கு இடையில் திடீர் பிரவேசமாக ஓரிருவர் நுழைந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் யோசிக்கவில்லை.

அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்

இஷ்டத்துக்கு வாழலாம் என்ற அமெரிக்காவில் கூட எம்பியாக, ஆளுநராக , குடியரசுத் தலைவராக போட்டியிட அடிப்படை தகுதி இருக்கிறது. கற்பையும், மானத்தையும் உயிரியினும் பெரிதாகக் முன்னிறுத்தி வாழும் தமிழ்நாட்டில் எப்படியும் வாழ்க்கை நடத்துவேன். யாரோடும் செல்வேன். யாரோடும் கரம் கோர்ப்பேன். யாரோடும் மேடைக்கு வந்து நிற்பேன் என சொல்லும் அபாயம் நேர்ந்திருக்கிறது.

கற்பையும், மானத்தையும் உயிரியினும் பெரிதாகக் முன்னிறுத்தி வாழும் தமிழ்நாட்டில் எப்படியும் வாழ்க்கை நடத்துவேன். யாரோடும் மேடைக்கு வந்து நிற்பேன் என சொல்லும் அபாயம் நேர்ந்திருக்கிறது. அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியமானது என தவெக தலைவர் விஜய்யை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாக சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *