மதுரை,ஜன.29; அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் 59 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2017-ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் ஒன்றிணைந்து அதே ஆண்டு ஜனவரி 8-ல் போராட்டம் நடத்தினர். ஜனவரி 15ஆம் தேதியன்று தடையை மீறி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
அலங்காநல்லூரில் விடிய விடிய போராட்டம்
இதனைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். மறுநாள் காலை (16.01.2017) இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து தடையை நீக்கி ஜல்லிக்கட்டினை நடத்த வேண்டும் என விடிய, விடிய அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தினர். அலங்காநல்லூர் போராட்டத்திற்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மீண்டும் திரண்டு (ஜனவரி 17) போராட்டம் நடத்தினர்.
பீட்டாவை தடை செய்யக்கோரி தீவிர போராட்டம்
பீட்டாவைத் தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டிற்கான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். முதலில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் தொடங்கிய இந்த போராட்டம் சமூக வலைதளங்கள் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுடன் பெரும் போராட்டக்களமாக மாறியது.
அலங்காநல்லூரில் போராடிய 63 பேர் மீது வழக்கு
இதையடுத்து ஜனவரி 21-ல் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. அலங்காநல்லூரில் போராடிய 63 பேர் கைது செய்யப்படனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
வழக்கிலிருந்து 59 பேர் விடுதலை
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு முதல் நடந்து வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறது. விசாரணை முடிந்த நிலையில் 59 பேரை விடுதலை செய்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார். 4 பேர் மீதான வழக்கு தனியே நடைபெற்று வருகிறது.