சென்னை,ஜன.12; தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக திமுகவின் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று (11.01.2026) கூறியிருந்தார்.ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஐ.பெரியசாமி தெரிவித்த இந்தக்கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
ஐ.பெரியசாமியின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
இதுபோன்ற சூழலில் சென்னையில் இன்று (12.01.2026) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம், கூட்டணி ஆட்சி குறித்து ஐ.பெரியசாமி கூறிய கருத்துப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
“கருத்துச்சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு”
அதற்கு செல்வப்பெருந்தகை, எல்லோருக்கும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு; அந்த வகையில் ஐ.பெரியசாமி அவரது கருத்தைக் கூறியிருக்கிறார்; ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து; ஆட்சியில் பங்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி சேர்ந்து முடிவெடுப்பார்கள் என்று பதிலளித்தார்.
“தமிழ்நாட்டில் தற்போது நடப்பது காங்கிரஸ் ஆட்சிதான்!”
அப்போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி எப்போது? என செய்தியாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் தற்போது நடப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான் என்று கூறினார். செல்வப்பெருந்தகையின் இந்தப்பேச்சு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
