சென்னை,ஏப்.10; விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்திருப்பது ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர் சிக்கலில் ‘ஜனநாயகன்’
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் விஜய்யின் கடைசித் திரைப்படம் என அறிவிக்கப்பட்டதால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பொங்கலை ஒட்டி கடந்த ஜனவரி 9-ம் தேதியே இப்படம் வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், தணிக்கைக்குழு (Censor Board) தொடர்பான சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசியல் காரணங்களால் படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இணையத்தில் கசிந்த முழு நீளத் திரைப்படம்
படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 10, 2026) காலை முதல் சில சட்டவிரோத இணையதளங்களில் ‘ஜன நாயகன்’ படத்தின் முழு பதிப்பும் கசிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக உயர்ந்த தரத்தில் (HD Print) இந்தப் படம் கசிந்திருப்பது படக்குழுவினரை நிலைதடுமாறச் செய்துள்ளது.
அதிர்ச்சியில் படக்குழு மற்றும் ரசிகர்கள்
சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் ஜனநாயகன் படம், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே கசிந்திருப்பது தயாரிப்பு நிறுவனமான KVN நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
“பல மாத உழைப்பு வீணாகிவிட்டது, ரசிகர்கள் தயவுசெய்து இணையதளங்களில் படத்தைப் பார்க்க வேண்டாம்” என படக்குழுவினர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேசமயம், “எங்கள் தலைவனின் கடைசிப் படத்தை நாங்கள் திரையரங்குகளில் மட்டுமே பார்ப்போம்” என விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் சட்டப்பூர்வமாக ஓர் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. அதில், கசிந்த ‘ஜனநாயகன்’ காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டுத்தனத்தை ஒழிப்போம்!
சினிமா என்பது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு. பல கோடி ரூபாய் முதலீட்டை ஒரே நாளில் சிதைக்கும் இந்த இணையதளத் திருட்டு (Piracy) வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விஜய்யின் மாஸான நடிப்பையும், ஹெச். வினோத்தின் அரசியல் கருத்துக்களையும் பெரிய திரையில் கண்டு மகிழ்வதே படக்குழுவினருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை.
