Skip to content

இந்தியப் பெருங்கடலில் ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம்; அமெரிக்கா வருந்த நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை!

டெஹ்ரான்,மார்ச்.05; மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்திருப்பது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்கு அமெரிக்கா “கடுமையாக வருத்தப்படும்” என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் நடந்தது என்ன? (The Incident in Indian Ocean)

ஈரான் நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 2,000 மைல்கள் தொலைவில், சர்வதேச கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த ஈரானின் ‘டெனா’ (Dena) என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல், டார்பிடோ (Torpedo) ஏவுகணைகள் மூலம் தாக்கி மூழ்கடித்தது. நேற்று முன்தினம் (மார்ச் 3, செவ்வாய்) கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இந்தத் தாக்குதலில் 130-க்கும் மேற்பட்ட ஈரானிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்தியாவின் விருந்தினர்”: ஈரானின் கடும் கோபம்

இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “இந்திய கடற்படையின் விருந்தினராக வந்த ‘டெனா’ போர்க்கப்பல், எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி சர்வதேச கடல் பகுதியில் வைத்துத் தாக்கப்பட்டது ஒரு மனிதாபிமானமற்ற செயல்; அமெரிக்கா ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது, இதற்காக அவர்கள் வருத்தப்படும் காலம் வரும்” என எச்சரித்துள்ளார்.

வெற்றிக்காகப் போராடுகிறோம்: அமெரிக்கா விளக்கம்

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) கூறுகையில், “சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரிக் கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம் மூழ்கடிப்பது இதுவே முதல் முறை. நாங்கள் வெற்றிக்காகப் போராடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா: ஒரு முடிவில்லா போர்?

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது போரைத் தொடங்கின. ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலடியாக இன்று காலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் புதிய தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ள போர்ச் சூழல்!

மத்திய கிழக்கில் நிலவும் இந்தப் போர்ச் சூழல், தற்போது இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது உலகப் பொருளாதாரத்தையும், அமைதியையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திவரும் இந்த தாக்குதல் அடுத்தகட்டமாக எங்குச் செல்லும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *