Skip to content

இந்தியா-பாகிஸ்தான் அணிகளை ஒரே பிரிவில் இடம்பெறச் செய்வதை ஐசிசி நிறுத்த வேண்டும்: ஒரு விரிவான அலசல்!

கொழும்பு,பிப்.16; கிரிக்கெட் உலகின் ‘பரம்பரை வைரி’கள் என்று அழைக்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்றாலே ரசிகர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், சமீபகாலமாக இந்தப் போட்டிகள் அதன் உண்மையான கிரிக்கெட் தரத்தை இழந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

செயற்கையான விளம்பரமும் ‘மிகைப்படுத்துதலும்’

முன்பெல்லாம் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் களத்தில் வீரர்களின் திறமையையும், வியூகங்களையும் வெளிப்படுத்தும் போர்க்களமாக இருந்தன. ஆனால் இன்று, ஒளிபரப்பு ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்தப் போட்டியை ஏதோ ஒரு ஹாலிவுட் அதிரடி படம் போல மிகைப்படுத்திச் சித்தரிக்கின்றன. “பிளாக்பஸ்டர்” ஆட்டம் என்று கூவிக்கூவி விளம்பரப்படுத்தப்படும் இந்தப் போட்டிகள், இறுதியில் ஒரு காற்றடிக்கப்பட்ட பலூன் போலச் சப்பென்று முடிந்துவிடுகின்றன.

ஒருதலைப்பட்சமான ஆட்டங்கள்

உண்மை என்னவென்றால், தற்போது பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. இந்திய அணி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் வேளையில், பாகிஸ்தான் அணி முறையான திட்டமிடல் இன்றித் திணறி வருகிறது. அமெரிக்க அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டியில் இருந்த விறுவிறுப்பு கூட, நேற்று (15.02.2026)நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் இல்லை என்பதே கசப்பான உண்மை.

வணிக நோக்கத்திற்காக ஒரே பிரிவில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள்!

ஐசிசி நடத்தும் ஒவ்வொரு உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் திட்டமிட்டே ஒரே பிரிவில் (Group) வைப்பதாக விமர்சனங்கள் உள்ளன. இதற்குப் பின்னால் இருக்கும் ஒரே காரணம் ‘விளம்பர வருவாய்’. விளம்பரதாரர்களைக் கவரவும், டிஆர்பி (TRP) ரேட்டிங்கை உயர்த்தவும் கிரிக்கெட்டின் தரத்தை ஐசிசி சமரசம் செய்துகொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

வெறுப்புணர்வை விதைக்கும் போக்கு

மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இடையே நிலவ வேண்டிய பரஸ்பர மரியாதை குறைந்து வருகிறது. சமீபத்திய போட்டிகளில் டாஸ் போடும்போது கைகுலுக்க மறுப்பது போன்ற நிகழ்வுகள், விளையாட்டின் மாண்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இளைய தலைமுறை ரசிகர்களிடையே தேவையற்ற வெறுப்புணர்வையும் விதைக்கின்றன.

டஃப் கொடுத்தால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்னை, அரசியல் விவகாரம் போன்றவற்றில் கசப்பான உறவு இருந்தாலும், அது விளையாட்டு வரை வந்து சேர்ந்திருப்பது மிகவும் மோசமானதாகப் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெல்ல வேண்டும் என்று தாய்நாட்டு ரசிகர்கள் விரும்புவது இயல்புதான். ஆனால், பாகிஸ்தான் அணியும் ஈடுகொடுத்து விளையாடினால் தான் ஆட்டத்தில் விறுவிறுப்பும் பரபரப்பும் இருக்கும். அப்படியான போட்டியைத் தான் ரசிகர்களும் விரும்புவார்கள்.

பாகிஸ்தான் முன்பு போல் வலிமையாக இல்லை என்பது ஐசிசிக்கு தெரியும், ஆனாலும்…?

பாகிஸ்தான் அணி முன்புபோல வலிமையாக இல்லை, பலவீனமான அணி என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரியாதது அல்ல. அப்படியிருந்தும் இவ்விரு அணிகளையும் ஒரு பிரிவில் இடம்பெயரச் செய்வதற்கு வணிக நோக்கம்தான் காரணம் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

வெறும் வணிகமாக மாறிய இந்திய-பாகிஸ்தான் போட்டி!

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் என்பது ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் உச்சகட்டமாக இருந்தது. ஆனால், தற்போது அது வெறும் வணிகப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் தரமான, சவாலான ஆட்டத்தையே எதிர்பார்க்கிறார்கள். எனவே, வருவாயை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், தகுதியின் அடிப்படையில் அணிகளைப் பிரிப்பதும், தேவையற்ற மிகைப்படுத்தல்களைக் குறைப்பதும் கிரிக்கெட் விளையாட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *