டெல்லி,மார்ச்.24; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பு (Scheduled Caste) சலுகைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 24, 2026) வழங்கியுள்ளது. இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மட்டுமே பட்டியல் சமூகத்தினரான இருக்க முடியும் என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
சாதி ரீதியாக பாகுபாடு காட்டிய, துன்புறுத்திய நபர்கள் மீது எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆந்திராவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஷ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தனது தீர்ப்பை அளித்தது. ஆனால், அந்த போதகர் நீண்ட காலமாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருவதால், அவர் பட்டியலின அந்தஸ்தைப் பயன்படுத்த முடியாது என எதிர் தரப்பு வாதிட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த நபர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் பட்டியலின சலுகைகளைப் பெற முடியாது என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
நீதிமன்றத்தின் முக்கிய விளக்கங்கள்
நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
1950-ஆம் ஆண்டு ஆணை: 1950-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) ஆணையின்படி, இந்து, சீக்கிய அல்லது பௌத்த மதத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எவரும் பட்டியலின வகுப்பினராகக் கருதப்பட முடியாது.
பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு: மதம் மாறிய பிறகு, அரசியலமைப்பின் கீழ் வழங்கப்படும் இடஒதுக்கீடு, சட்டரீதியான பாதுகாப்பு அல்லது சலுகைகளை எவரும் கோர முடியாது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம்: கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) பாதுகாப்பு கோர முடியாது. ஏனெனில் கிறிஸ்தவ மதத்தில் சாதிய முறை கிடையாது என்பதால் இந்தச் சட்டம் அவருக்குப் பொருந்தாது.
சாதிச் சான்றிதழ் மட்டும் போதாது: ஒருவரிடம் SC சாதிச் சான்றிதழ் இருந்தாலும், அவர் வேறு மதத்தைப் பின்பற்றுவது உறுதியானால், அந்தச் சான்றிதழை வைத்து அவர் சலுகை கோர முடியாது.
சாதி அந்தஸ்து மீண்டும் கிடைக்குமா?
ஒருவர் கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிறகு, மீண்டும் தனது தாய் மதமான இந்து மதத்திற்குத் திரும்பினால் (Re-conversion) மற்றும் அவரது சமூகம் அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவருக்கு மீண்டும் SC அந்தஸ்து கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் மதம் மாறிய நிலையில் இருக்கும் எவருக்கும் இந்த சலுகைகள் பொருந்தாது என நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
மதமாற்றம், இடஒதுக்கீடு பற்றிய விவாதங்களுக்கு தெளிவான சட்டப்பார்வை
இந்தத் தீர்ப்பு மதமாற்றம் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான நீண்டகால விவாதங்களுக்கு ஒரு தெளிவான சட்டப் பார்வையை வழங்கியுள்ளது. SC சலுகைகள் என்பது ஒரு குறிப்பிட்ட மதப் பின்னணி கொண்ட சமூகங்களுக்கு மட்டுமே உரியது என்பதையும், மதமாற்றம் அந்த உரிமையை முழுமையாகப் பறிக்கும் என்பதையும் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
