Skip to content

இன்று அறிவிக்கப் போவதாகச் சொன்னாரே? சொன்னபடி செய்வாரா பிரேமலதா விஜயகாந்த்? பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

சென்னை,பிப்.03; சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்று (03.02.2026) அறிவிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியிருந்ததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றத் தொடங்கிவிட்டன. தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, கூட்டணிக்குள் புதிய கட்சிகளைக் கொண்டு வருவது போன்றவற்றில் திமுக, அதிமுக ஆகிய இரு அணிகளும் மும்முரமாக இயங்கி வருகின்றன.

தேமுதிக, ராமதாஸின் பாமக அணி நிலைப்பாடு என்ன?

இதில் தேமுதிக, ராமதாஸின் பாமக அணி ஆகியவை எந்தக் கூட்டணியில் இணையப் போகின்றன என்பது பற்றி தெளிவு இல்லாமலேயே இருந்து வருகிறது.
கடலூரில் கடந்த மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற தேமுதிகவின் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்பதாக முன்னர் பிரேமலதா கூறியிருந்தார். ஆனால், அவர் கூறியபடி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

திமுக, அதிமுக என இரு கூட்டணிகளுடனும் பேச்சு!

கூட்டணி தொடர்பாக திமுக, அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

திமுகவில் 8 தொகுதிகள் வரை தர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டும் என திமுகவிடம் தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சியமைக்கும்!

இதுபோன்ற சூழலில் தமிழ்நாடு முழுவதும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற பெயரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொண்டிருந்த பரப்புரை பயணம் இரு தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் முடிவடைந்தது.

பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தேமுதிக இருக்கிறது. விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். கூட்டணி குறித்து சென்னையில் 3ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அறிவிப்பேன். தேமுதிக இடம்பெறும் கூட்டணி தான் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

கூட்டணி குறித்து முடிவெடுத்துவிட்டார் பிரேமலதா விஜயகாந்த்!

இதனிடையே தேமுதிக கூட்டணி குறித்து முடிவெடுத்து விட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதை கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்திவிட்ட போதிலும், அவர் வசமுள்ள குறைந்த விழுக்காடு வாக்குகளும் தங்கள் கூட்டணியின் வெற்றிக்கு உதவும் என்று திமுக, அதிமுக என இரு கட்சிகளும் கருதுகின்றன.
இதன் காரணமாக, பிரேமலதா விஜயகாந்த் இன்று வெளியிடவிருக்கும் கூட்டணி குறித்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *