Skip to content

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்! உங்கள் பெயர் உள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

சென்னை,பிப்.23; தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (பிப்ரவரி 23,2026) வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எத்தனை பேர்?

சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு (Special Intensive Revision – SIR), தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் பாலின வாரியான விவரங்கள் வருமாறு:

பெண் வாக்காளர்கள்: 2,89,60,838

ஆண் வாக்காளர்கள்: 2,77,38,925

மூன்றாம் பாலினத்தவர்: 7,617

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், வாக்காளர் பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தகுதியற்ற பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய வாக்காளர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் அதிரடி மாற்றங்கள்

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கையாக, சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. இறப்பு, குடிபெயர்தல் மற்றும் இரட்டைப் பதிவு போன்ற காரணங்களால் இந்த நீக்கம் நடைபெற்றுள்ளது.

அதே சமயம், டிசம்பர் 19 முதல் ஜனவரி 30 வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 27.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 18-19 வயதுடைய சுமார் 12.51 லட்சம் இளம் வாக்காளர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

பெரிய மற்றும் சிறிய தொகுதிகள் எவை?

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் (5,36,991 வாக்காளர்கள்) முதலிடத்தில் உள்ளது. மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகம் (1,16,896 வாக்காளர்கள்) தொகுதி உள்ளது.

பெயர் உள்ளதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது பெயர் உள்ளதா என்பதை voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI Net செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம். இந்த இணையத்தில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள EPIC நம்பரை பதிவிட்டால், உங்களது பெயர் அந்த லிஸ்ட்டில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *