Skip to content

ஈரான் உடனான போர்; “10-க்கு 15 மதிப்பெண்” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு!


வாஷிங்டன்,மார்ச்.05; ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா மிக வலுவான நிலையில் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய போர் சூழலில் அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு அவர் “10-க்கு 15” என அசாதாரண மதிப்பெண் வழங்கி பாராட்டியுள்ளார்.

மிகவும் வலுவான நிலையில் அமெரிக்கா

நேற்று (மார்ச் 4,புதன்கிழமை) வெள்ளை மாளிகையில் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளுடன் பேசிய டிரம்ப், ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் மிகக் குறுகிய காலத்தில் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“நாங்கள் போர்க்களத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். 10-க்கு எத்தனை மதிப்பெண் என்று கேட்டால், நான் 15 என்று சொல்வேன்” என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தற்போது போரில் மேலோங்கிய நிலையில் இருப்பதாக அவர் உறுதிபடக் கூறினார்.

ஆறாவது நாளை எட்டிய போர்

ஈரான் உடனான போர் தற்போது ஆறாவது நாளை எட்டியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து வெடிகுண்டு சத்தங்கள் கேட்டு வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, இலங்கை கடற்கரைக்கு அப்பால் ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது, கடற்படை மோதலில் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

அணு ஆயுத எச்சரிக்கை

ஈரானைத் தாக்க எடுத்த முடிவை நியாயப்படுத்திப் பேசிய டிரம்ப், ஈரான் அணு ஆயுதங்களை நெருங்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதிபடத் தெரிவித்தார்.
“பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதங்கள் இருந்தால், மோசமான விளைவுகளே ஏற்படும்” என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறினார்.

ஈரானின் ராணுவக் கட்டமைப்பு சிதைப்பு

ஈரானின் ஏவுகணைத் திறன் மற்றும் ராணுவக் கட்டமைப்பை முடக்குவதே இந்தப் போரின் முக்கிய நோக்கம் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஈரானின் முக்கிய ஏவுகணைத் தளங்கள் மற்றும் கடற்படை சொத்துகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், போர் முடிந்த பிறகு ஈரானில் ஆட்சி மாற்றம் செய்யப்படுமா அல்லது அமெரிக்காவின் அடுத்தகட்டத் திட்டம் என்ன என்பது குறித்து வெள்ளை மாளிகை இன்னும் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.

தேர்தலின்போது புதிய போர்கள் கிடையாது என உறுதி தந்தார்!

டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது “புதிய போர்களைத் தொடங்க மாட்டேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தாலும், தற்போது ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஈரானின் ராணுவ பலத்தை முழுமையாகச் சிதைக்கும் வரை இந்தத் தாக்குதல்கள் தொடரும் என்பதை டிரம்பின் பேச்சு உணர்த்துகிறது. மத்திய கிழக்கில் நிலவும் இந்தப் பதற்றமான சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *