டெஹ்ரான்,மார்ச்.01; ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் அணுசக்தி விவகாரம் தொடர்பான மோதல் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் தலைநகரான டெஹ்ரானில் திடீரென நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
டெஹ்ரானில் அதிரடி குண்டுவெடிப்புகள்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று (பிப்ரவரி 28, சனிக்கிழமை) காலை திடீரென பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்கனவே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு நடவடிக்கையாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா – இஸ்ரேல் தரப்பு விளக்கம்
ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தல்களை முறியடிக்கவும், தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த “தற்காப்பு” தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்களின் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானில் “பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்” தொடங்கப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொலை?
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளதுடன், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நேரத்தில் அவர் அங்கு இருந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், 86 வயது நிரம்பிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த தகவலை அதிபர் டொனால்டு டிரம்பும் உறுதி செய்துள்ளார்.
தலைநகர் டெஹ்ரானில் புகை மண்டலம்; மக்களிடையே பெரும் பீதி
தாக்குதலால் டெஹ்ரான் வீதிகளில் புகை மண்டலங்கள் சூழ்ந்து காணப்படுவதோடு, மக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. இந்த மோதல் ஈரான் – இஸ்ரேல் எல்லைகளுடன் நிற்காமல், துபாய், அபுதாபி, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பல நாடுகள் தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
உயிருக்கு அஞ்சி டெஹ்ரானிலிருந்து வெளியேறும் மக்கள்
தலைநகர் டெஹ்ரான் மட்டுமின்றி ஈரான் முழுவதும் உள்ள பல்வேறு இலக்குகள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, டெஹ்ரானில் மக்கள் உயிருக்கு அஞ்சி வீடுகளைவிட்டு வெளியேறி வேறு நகரங்களுக்கு செல்வதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அச்சத்தில் உறைந்துள்ள மக்கள் தாங்கள் இங்கேயே இறந்துவிடுவோம் என்று பீதியுடன் கூறியதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதிலும், இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டி உள்ளது. இதற்கு தீர்க்கமான பதிலளிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றம் உலகப் பொருளாதாரத்திலும், கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.
