டெல்லி, டிச.11; சோனியா காந்தியின் குடும்பம் சட்டத்தை மதித்ததில்லை என்று பாஜக எம்பி கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவையில் சமீபத்தில் பேசிய பிரியங்கா காந்தி, பழைய விஷயங்களை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனைக் குறிப்பிட்டு பாஜக உறுப்பினர் கங்கனா ரனாவத், மக்களவையில் ஆற்றிய உரையின்போது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, அவரது குடும்பத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை மதிப்பதில் காந்தி குடும்பம் பாரம்பரியமாகத் தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.
உங்கள் குடும்பம் சட்டத்தை மதித்ததில்லை: கங்கனா ரனாவத்
பழைய விஷயங்களை விடுங்கள் எனக் கூறும் பிரியங்கா காந்தியிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன்,” என்று கங்கனா தனது பேச்சைத் தொடங்கினார். மேலும், அவர் பிரியங்கா காந்தியின் தாயாரான சோனியா காந்தியின் குடியுரிமை தொடர்பான ஒரு முக்கியப் பிரச்சினையை எழுப்பினார். “உங்கள் தாயாரான சோனியா காந்தி, 1983-ஆம் ஆண்டுதான் இந்தியக் குடியுரிமை பெற்றார்; ஆனால், அவர் அதற்கு முன்பே வாக்களித்தார்; பிரியங்கா காந்தி இதனை நினைவில் கொள்ள வேண்டும். முன்பும் சரி, இப்போதும் சரி, உங்கள் குடும்பம் நாட்டின் சட்டம் ஒழுங்கை மதித்ததில்லை,” என்று கங்கனா ரனாவத் மக்களவையில் கடுமையாகப் பேசினார்.
சோனியா மீது கங்கனாவின் குற்றச்சாட்டு; அரசியலில் பரபரப்பு
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்களித்தார் என்ற கங்கனா ரனாவத்தின் இந்த குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்தி குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் மற்றும் அவர்கள் சட்ட விதிகளைப் பின்பற்றிய விதம் குறித்துப் பல காலமாக எழுப்பப்பட்டு வரும் விமர்சனங்களை இந்த நாடாளுமன்றப் பேச்சு மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சித் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் ஏதும் வெளியாகவில்லை.
