டெல்லி,டிச.28; உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தாக்கல் செய்த மனுவை நாளை (29.12.2025) உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
வழக்கின் பின்னணி மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
2017-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2019-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் ஏழு ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 23ஆம் தேதியன்று அவரது தண்டனையை நிறுத்தி வைத்து பிணை வழங்கியது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சிறையில் மரணமடைந்த வழக்கில் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ-யின் மேல்முறையீடு மற்றும் வாதங்கள்
டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த பிணை உத்தரவு சட்டவிரோதமானது என்று சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி (MLA)’பொது ஊழியர்’ என்ற வரம்பிற்குள் வரமாட்டார் என்ற உயர் நீதிமன்றத்தின் விளக்கம் தவறானது என்று சிபிஐ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கொடூரமான குற்றங்களில் தண்டனையை நிறுத்தி வைப்பது சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் சிபிஐ எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அச்சமும் புகாரும்
குல்தீப் சிங் செங்காருக்கு பிணை வழங்கப்பட்ட செய்தி வெளியானதும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாய் சிபிஐ அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் அளித்துள்ளனர். விசாரணை அதிகாரி குற்றவாளி தரப்புடன் கைகோர்த்துச் செயல்படுவதாகவும், இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். “உச்ச நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறோம்” என பாதிக்கப்பட்ட சிறுமி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சிபிஐயின் மனு; உச்ச நீதிமன்றத்தில் டிச.29-ல் விசாரணை
தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, நாளைய தினம் (டிச.29, திங்கள்கிழமை) சிபிஐ-யின் இந்த சிறப்பு விடுப்பு மனுவை விசாரிக்க உள்ளது. இதனுடன், வழக்கறிஞர்கள் அஞ்சலி படேல் மற்றும் பூஜா ஷில்ப்கர் ஆகியோர் தாக்கல் செய்த தனித்தனி மனுக்களும் ஒன்றாக விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உன்னாவ் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இந்த விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நீதி நிலைநாட்டப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
