Skip to content

உன்னாவ் பாலியல் வழக்கு: குல்தீப் சிங்கிற்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!


டெல்லி, டிச.27; உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் சிங்கருக்கு (Kuldeep Singh Sengar) ஜாமீன் வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய புலனாய்வு அமைப்பான CBI உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பின்னணி மற்றும் உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

2017-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குல்தீப் சிங் சிங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் குல்தீப் சிங், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவர் ஏற்கனவே 7 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளதை சுட்டிக்காட்டி, அவரது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.

சிபிஐ-யின் மேல்முறையீடு; சட்டப் போராட்டம் தொடர்கிறது

குல்தீப் சிங் செங்காருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

இதுபோன்ற சூழலில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, சிபிஐ தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதும் சிபிஐ, இந்த ஜாமீன் உத்தரவு முறையற்றது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழந்த வழக்கில் செங்காருக்கு 10 ஆண்டு சிறை

முக்கியமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சிறைக் காவலில் உயிரிழந்த வழக்கிலும் குல்தீப் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாலியல் வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், இந்த இரண்டாவது வழக்கின் காரணமாக அவர் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்பதை சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அச்சம்

நீதிமன்றத்தின் இந்த ஜாமீன் உத்தரவு குறித்து கவலை தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட பெண், இது தனது குடும்பத்திற்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் என்று கூறியுள்ளார். சிபிஐ-யின் மேல் முறையீடு நடவடிக்கை நீதித்துறை மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதியை உறுதி செய்யுமா?

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய ஒன்றாகும். அதிகார பலம் கொண்ட ஒருவருக்கு எதிராக சிபிஐ எடுத்துள்ள இந்த மேல்முறையீட்டு நடவடிக்கை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *