அலங்காநல்லூர், ஜன.17; உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகின்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வு ‘ஏறு தழுவுதல்’
பண்டைக் காலங்தொட்டு ஏறுதழுவுதல் (Jallikattu) என்பது தமிழர்களின் தொன்மையான, வீர விளையாட்டு ஆகும். அன்றையக் காலத்தில் காளையை அடக்கும் இளைஞர்கள், தங்கள் வீரத்தைக் காட்டி, மணப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது அல்லது திருமணத்தில் வெற்றி பெறுவது போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மரபு வழி விளையாட்டாக இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. . இது “ஏறு” (காளை) தழுவுதல் என்று அழைக்கப்படுகிறது, மேலும் சங்க இலக்கியங்களான கலித்தொகை, மலைபடுகடாம் போன்றவற்றில் இது பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. ஏறு தழுவுதல் தமிழர்களின் பண்பாட்டோடும், பாரம்பரியத்தோடும் பின்னிப் பிணைந்த ஒரு நிகழ்வாகும். இன்றையக் காலத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு என்ற பெயர்களில் இது நடைபெறுகிறது.
அலங்காநல்லூரில் பிரமாண்ட ஏறு தழுவுதல் அரங்கம்
அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றதாகும்.
அங்கு சுமார் 62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஏறு தழுவுதல் அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2024ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.
ஒலி, ஒளி காட்சிக்கூடம், நூலகத்துடன் கூடிய அரங்கம்
இங்கு ஜல்லிக்கட்டு அரங்கம், கால்நடை மருந்தகம், ஒலி ஒளி காட்சிக்கூடம், அருங்காட்சியகம், அருங்காட்சியகத்துடன் இணைந்த ஒரு சிறு நூலகம் ஆகியவற்றைக் கொண்ட கட்டுமானமாக 83,462 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஒரே நேரத்தில் 5,000 பேர் வரை அமர்ந்து பார்க்கத்தக்கதாக மூன்றடுக்கு பார்வையாளர் மாடமும் அமைக்கப்பட்டுள்ளது.
காளைகளுடன் மல்லுக்கட்டத் தயாராகும் காளையர்
இந்த பிரமாண்ட அரங்கில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் களம் காண்கின்றன. காளைகளுடன் மல்லுக்கட்ட நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் தயாராக உள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண வெளிநாட்டவர் உள்பட ஆயிரக்கணக்கானோர் வருகை புரிவார்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
