சென்னை,ஜன.23; ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு வந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஒரு திட்டமாகும்.
காந்தி பெயரிலான திட்டத்தின் பெயரையே மாற்றினர்
உடல் உழைப்பு வேலைகளுக்கு ஊதியம் அளித்து, வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம். இதில் பணிபுரிபவர்களுக்கான ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
சமீபத்தில் மத்திய அரசு இந்தத் திட்டத்தின் பெயரை VBG RAMG என மாற்றியமைத்தது. வேலை நாட்கள் 100லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், மகாத்மா காந்தியின் பெயரிலான இத்திட்டத்தின் பெயரை மாற்றியமைத்தற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மகாத்மாவின் பெயரிலேயே திட்டம் தொடர தனித்தீர்மானம்
இதுபோன்ற சூழலில், 100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்றுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று (23.01.2026) முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். மேலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பெயரை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதன் மீதான விவாதத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது – மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு விபி ஜி ராம் ஜி என பெயரிப்பட்டுள்ளதை எதிர்க்கிறோம் – தமிழகத்தில் பாகுபாடின்றி மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.
குடிநீர் இணைப்பு திட்டம்; ரூ.3,112 கோடி நிதி தரவில்லை
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திலும் ரூ.3112 கோடி நிதி விடுவிக்கவில்லை – இப்படி இவர்கள் நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்தினால் ஏழை எளிய கிராமப்புற மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் பேச வேண்டும்
மகாத்மா காந்தி பெயரிலான இத்திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது குறித்து பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும். வேலைக்கான வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் பேச வேண்டும். இது குறித்து அவர் பேசுவார் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
