சென்னை,மார்ச்.24; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகளைத் தொடர்ந்து, அதிமுக தனது தேர்தல் பரப்புரையை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட தேர்தல் பரப்புரை பயணத் திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் தொடங்கும் பரப்புரை பயணம்
அதிமுகவின் தேர்தல் பரப்புரை நாளைய தினம் (மார்ச் 25, புதன்கிழமை) சென்னையில் உள்ள மயிலாப்பூர் மார்க்கெட் பகுதியில் இருந்து தொடங்குகிறது. இந்தப் பரப்புரையின் மூலம் அதிமுக தனது பலத்தை நிரூபிக்கவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
25.03.2026 – மயிலாப்பூர் (பிற்பகல் 3.30 மணி)
27.03.2026 – ஆலந்தூர் (மாலை 4 மணி), தாம்பரம் (மாலை 6 மணி)
28.03.2026 – ஆர்.கே.நகர் (மாலை 4 மணி), திருவொற்றியூர் (மாலை 6 மணி)
29.03.2026 – நாகர்கோவில் (மாலை 4.30 மணி), ராதாபுரம் (மாலை 5.30 மணி)
30.03.2026 – கடையநல்லூர் (மாலை 4 மணி), கோவில்பட்டி (மாலை 6 மணி)
31.03.2026 – சிவகாசி (மாலை 4 மணி), பரமக்குடி (மாலை 6 மணி)
01.04.2026 – சிவகங்கை (மாலை 4 மணி), புதுக்கோட்டை (மாலை 6 மணி)
அதிமுகவின் முக்கிய வாக்குறுதிகள்
பரப்புரையின் போது எடப்பாடி பழனிசாமி முன்வைக்க உள்ள சில முக்கிய தேர்தல் அம்சங்கள்:
குல விளக்கு திட்டம்: மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்படும்.
இலவச எரிவாயு: ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்.
விலைவாசி கட்டுப்பாடு: பணவீக்கத்தைக் குறைக்க குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் ஒருமுறை நிதியுதவி.
இலவச பேருந்து பயணம்: ஆண்களுக்கும் இலவச பேருந்து பயண வசதி.
கூட்டணியின் பலம் மற்றும் வியூகம்
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (மார்ச் 23, செவ்வாய்) வைத்து பாஜக (27 இடங்கள்), பாமக (18 இடங்கள்) மற்றும் அமமுக (11 இடங்கள்) ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மெகா கூட்டணியின் பலத்துடன், திமுக அரசை வீழ்த்தி மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வருவதே இலக்கு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
