Skip to content

எளிமையின் சிகரமாக, நேர்மையின் இலக்கணமாக வாழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு: தலைவர்கள் புகழஞ்சலி


சென்னை,பிப்.25; சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் நல்லகண்ணுவின் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.

நல்லகண்ணுவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு CPI மூத்த தலைவர் முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார்.

அஞ்சலிக்காக கட்சி அலுவலகத்தில் நல்லகண்ணுவின் உடல்

இதனிடையே, தோழர் நல்லகண்ணுவின் உடல் ராஜீவ் காந்தி மருத்துமனையிலிருந்து தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.

நல்லகண்ணுவின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் குறிப்பு

தோழர் நல்லகண்ணுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நல்லகண்ணு மறைவு அதிர்ச்சி அளிக்கிறது, அரசியலில் தூய்மையின் அடையாளமாக திகழ்ந்து வந்தவரை தற்போது நாம் இழந்துள்ளோம். அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: தவெக விஜய்

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

அடித்தட்டு மக்களின் உரிமைக்காக போராடியவர்: விகே சசிகலா

நல்லகண்ணுவின் மறைவு தொடர்பாக வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திர போராட்ட வீரரான நல்லகண்ணு வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக உழைத்தவர். நல்லகண்ணு எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு, தன்னலமின்றி, அனைவரிடத்திலும் சமமாக நட்பு பாராட்டக்கூடிய சிறந்த மனிதர் என்று புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *