Skip to content

ஏவிஎம் சரவணன் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி; முதுபெரும் ஆளுமைகளில் ஒருவர் என இரங்கல்

மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட இரங்கல் செய்திக்குறிப்பில், தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவிஎம் நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ – அதே அளவுக்கு ஏவிஎம் நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது. அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகியவர் ஏவிஎம் சரவணன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சரவணனின் மறைவு குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் திரையுலகில் பல புதுமைகளை புகுத்துவதற்கு காரணமாக இருந்த அவர், ஏராளமான கலைஞர்கள் தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர் என்று புகழஞ்சலி செலுத்தி உள்ளார். ஏவிஎம் சரவணனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஏவிஎம் நிறுவனப் பணியாளர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *