டெல்லி,மார்ச்.15; தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் இன்று (மார்ச், 15, 2026) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகிறார். இந்த விசாரணை வழக்கின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் பின்னணி
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதையும் உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது.
விசாரணைக்காக டெல்லி சென்றடைந்த விஜய்
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 15) மூன்றாவது முறையாக விசாரணை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றடைந்தார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட 7 பேர் சென்றுள்ளனர்.
சிபிஐ கோரிய ஆவணங்களை தாக்கல் செய்யவிருக்கும் விஜய் தரப்பு
டெல்லியில் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் விஜய், இன்று காலை 10.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, சிபிஐ அலுவலகத்திற்குச் செல்கிறார்.
அப்போது, ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட விசாரணையின்போது கேட்கப்பட்ட ஆவணங்களை விஜய் தரப்பில் தாக்கல் செய்வார்கள் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துவார்கள்.
விசாரணை காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை வரை நீடிக்கலாம் எனத் தெரிகிறது. தேவைப்பட்டால், விஜய்யிடம் நாளையும் (மார்ச் 15, 2026) விசாரணை நடத்தப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த சிபிஐ விசாரணை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ்நாடு போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகளே நெரிசலுக்குக் காரணம் என்று தவெக தரப்பு கூறி வரும் நிலையில், சிபிஐயின் இறுதி அறிக்கை யாருக்குச் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு நடக்கிறதா?
அதேவேளையில் விஜய், பாஜகவுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசவிருப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. இதனை விஜய் தரப்பும் பாஜகவினரும் மறுத்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நெருக்கமானவர்கள் விஜய்யிடம் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.
தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், சில தினங்களுக்கு முன்னர் காணொளி வாயிலாக நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பெரும்பாலானோர், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்ததாக தகவல் வெளியானது நினைவு கூரத்தக்கது.
