Skip to content

கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; திமுக ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கே பாதுகாப்பில்லையா? – எதிர்க்கட்சிகள் கேள்வி!

காரைக்குடி,மார்ச்.11; சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரம் எம்பியின் அலுவலகத்தில் இன்று (மார்ச் 11,புதன்) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரைக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது தாக்குதல்; செல்வப்பெருந்தகை கண்டனம்

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதும் ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வன்முறை சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, இச்செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: டிடிவி தினகரன் கண்டனம்

இச்சம்பவத்தைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை சந்தி சிரிக்கும் அளவிற்கு திமுக அரசு சீரழித்துள்ளது; கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை”

யாருக்கு பாதுகாப்பு?: “கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பது இந்தத் தாக்குதல் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது”

அரசின் அலட்சியம்: “சாலைகளிலும், வீடுகளிலும், தலைவர்களின் நினைவாலயங்களிலும் சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டு வீசுவதை திமுக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. இந்த அலட்சியப்போக்கு தான், ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள ஒரு எம்.பி-யின் அலுவலகத்தின் மீதே தாக்குதல் நடத்தும் துணிச்சலை சமூக விரோதிகளுக்கு கொடுத்துள்ளது என்றும் தினகரன் சாடியுள்ளார்.

“மக்களே பாடம் புகட்டுவார்கள்”

திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கூட பாதுகாப்பு அளிக்க முடியாத ஒரு சூழல் தமிழகத்தில் நிலவுவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். “சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தோல்வியடைந்த திமுக அரசை, வரும் தேர்தலில் மக்கள் அடியோடு துடைத்தெறிவது நிச்சயம்” என்றும் அவர் தனது அறிக்கையில் சூளுரைத்துள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியிருப்பது, தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *