காரைக்குடி,ஏப்.10; காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்விருப்பதன் காரணமாக, பேருந்து நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்ரல் 10,வெள்ளி) விஜய் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
காரைக்குடியில் பரப்புரை; பேருந்து நிலையம் மூடல்
காலை மதுரை விமான நிலையத்திலிருந்து வரும் விஜய் மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடி செல்கிறார். அங்கு பல்வேறு பகுதிகள் வழியாக திறந்த வேனில் நகர்வலமாக சென்று ஆதரவு திரட்டுகிறார். பின்னர் 12 மணிக்கு மேல் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தேவர் சிலை முன்பு பகல் 12 மணியளவில் திறந்தவேனில் இருந்தபடி பேசுகிறார். காரைக்குடியில் போட்டியிடும் மருத்துவர் பிரபுவை ஆதரித்து விஜய் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
வந்த வழியாகவே திரும்பிச் செல்ல அறிவுறுத்தல்
விஜய் பரப்புரைக்கு 37 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 12.30 மணியிலிருந்து 2 மணிக்குள் பரப்புரையை முடித்துக் கொள்ள வேண்டும்-எந்த பாதையின் வழியாக வருகிறாரோ அதே பாதையில் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
மின்மாற்றிகள், மின்கம்பிகள் மீறி ஏறுவதை தடுக்க ஏற்பாடுகள்
விஜய் வருகையை ஒட்டி அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தேவர் சிலை அருகிலுள்ள மரங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மீது ஏறி நிற்பதை தடுக்கும் வகையில் அவற்றை சுற்றி இரும்பு தகரங்களை கொண்டு அடைத்துள்ளனர்.
மேலும் புதிய பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளதால், அங்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு நடந்து, அல்லது அதிக செலவில் ஆட்டோ பிடித்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
கடலூரில் நாளை பரப்புரை மேற்கொள்ள அனுமதி
இதனிடையே, விஜய் நாளை கடலூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது. நேற்றைய தினம் கடலூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் பாதுகாப்பு கருதி காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில், தற்போது நாளை (ஏப்ரல் 11) கடலூரில் பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அவர் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க உள்ளார்.
பரப்புரை நடைபெறும் முக்கிய இடங்கள்
விஜய் தனது வாகனப் பேரணி மற்றும் பரப்புரையை கடலூரின் மிக முக்கியமான பகுதிகளில் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, மஞ்சக்குப்பம் மைதானம், வடலூர், விருத்தாசலம் புறவழிச்சாலை, திட்டக்குடி ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
இந்நிலையில், பெரம்பூர், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் விஜய்க்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, கடலூர் பிரசாரமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய் தனது பரப்புரையைத் தொடரத் திட்டமிட்டுள்ளார்.
