மும்பை,பிப்.10; இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025-26 ஆம் ஆண்டிற்கான வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் ஆகியோர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய வீரர்கள் நீக்கம் – பின்னணி என்ன?
கடந்த காலங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய முகமது ஷமி, காயம் மற்றும் நீண்ட கால ஓய்வு காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் ‘ஏ’ பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், இஷான் கிஷன், சர்ஃபராஸ் கான், ரஜத் படிதார் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் இந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. மதிப்பீட்டுக் காலத்தில் இவர்கள் போதிய சர்வதேச போட்டிகளில் விளையாடாததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு தரமிறக்கம்
மற்றொரு முக்கிய மாற்றமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் தனது உயர்மட்ட பிரிவான ‘A+’ பிரிவை ரத்து செய்துள்ளது. இதனால் இதுவரை அந்தப் பிரிவில் இருந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தற்போது ‘B’ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது ஒரு வகை கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னேற்றம் கண்ட வீரர்கள்
புதிய பட்டியலில் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ‘A’ பிரிவில் முன்னிலையில் உள்ளனர். இளம் வீரர் சாய் சுதர்சன் முதல்முறையாக மத்திய ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவுட் ஆஃப் ஃபார்ம் என்றால் உயர்மட்ட பிரிவுகளில் இடமில்லை!
கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் இந்த புதிய ஒப்பந்தப் பட்டியல், ஃபார்ம் மற்றும் உடல் தகுதிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. நீக்கப்பட்ட வீரர்கள் மீண்டும் உள்ளூர் போட்டிகளிலும், பிற வாய்ப்புகளிலும் தங்களை நிரூபித்தால் மட்டுமே அடுத்த ஆண்டு ஒப்பந்தத்தில் இடம் பிடிக்க முடியும். குறிப்பாக முகமது ஷமி போன்ற மூத்த வீரர்களுக்கு இது ஒரு சவாலான காலமாக அமைந்துள்ளது.