Skip to content

கீழடியில் ரூ.22 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அகழ் வைப்பகம்; நாளை திறந்து வைக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்!

திருப்புவனம்,ஜன.30; கீழடியில் தனியார் தென்னந்தோப்புக்கு மத்தியில் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்த திறந்தவெளி அகழ் வைப்பகத்தை நாளை (31.01.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 கட்டமாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறியப்பட்டது.

கீழடி அருங்காட்சியகத்தைகண்டு வியக்கும் பார்வையாளர்கள்

மேலும், இங்கு கிடைத்த பல ஆயிரம் தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கீழடியில் 31,000 சதுரஅடியில் ரூ.18.43 கோடியில் அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டது. இதை ஏராளமானோர் கண்டு வியந்து வருகின்றனர்.

கோரிக்கையை ஏற்று திறந்தவெளி அகழ்வைப்பகம் உருவாக்கம்

இந்நிலையில் அகழாய்வு நடை பெற்ற இடத்திலேயே திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 4, 5, 7 மற்றும் 8-ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் ரூ.22 கோடியில் 5,917 சதுர மீட்டரில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள அகழாய்வு குழிகளில் செங்கல் சுவர்கள், உறை கிணறுகள், பானை ஓடுகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணாடி மேற்கூரை மற்றும் தடுப்புகள், நடை பாலம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

அகழாய்வு குழிகளுக்குள்ளேயே நேரடியாகச் சென்று, 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக வாழ்வியலை, வீடுகள் மற்றும் உறை கிணறுகளை அப்படியே நேரில் பார்க்கும் வகையில், இது அமைக்கப்பட்டுள்ளது.

கீழடி திறந்தவெளி அகழ்வைப்பகம் – முக்கிய விவரங்கள்:

அமைப்பு: 7-ம் கட்டம் மற்றும் 2, 4, 6-ம் கட்ட அகழாய்வு நடந்த இடங்கள், இரண்டு பெரிய திரையரங்குகள்/அரங்குகளாக மாற்றப்பட்டு, திறந்த வெளியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சம்: அகழாய்வு குழிகளுக்குள் இறங்கி, பழங்காலத் தமிழர்களின் வீடுகள், சுடுமண் குழாய்கள், உறை கிணறுகள் மற்றும் தொழில் கூடங்களை நேரடியாகப் பார்த்து உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பயன்: இது மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சங்க கால நகர நாகரிகத்தை நேரில் காணும் அரிய வாய்ப்பை வழங்குகிறது.

இந்த அருங்காட்சியகம் கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் அகழாய்வுப் பகுதிகளில்கண்டெடுக்கப்பட்ட சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று ஆய்வாளர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *