சென்னை,மார்ச்.11; மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக ரீதியிலான சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சிலிண்டர் பதுக்கலை தடுக்க எஸ்மா சட்டம் அமல்
இதன் தொடர்ச்சியாக, சமையல் எரிவாயு (LPG) விநியோகத் தடையை சமாளிக்க, இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் பராமரிப்புச் சட்டத்தை (ESMA) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. சிலிண்டர்களைப் பதுக்குவது அல்லது கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுக்கலில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால்,எஸ்மா சட்டத்தை அமல்படுத்தியதால் மட்டும் பயன் கிட்டிவிடப்போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
‘எஸ்மா’ பிறப்பிக்கப்பட்டதால் விநியோகம் முறையாக நடந்துவிடுமா?
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமையல் எரிவாயு தட்டுப்பாடு விவகாரத்தில் எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டதாலேயே விநியோகம் முறையாக நடந்து விடும் என்று நம்புவதற்கு இல்லை; எஸ்மா சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்த மோடி அரசு முயற்சிக்கும். போர் முடிந்தாலும்கூட எரிவாயு விநியோகம் சீரடைய பல மாதங்கள் பிடிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
எனவே, மக்களுக்கு உதவும் இடைக்கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
“தாக்குதல் தொடங்கியதும் இந்தியாவுக்கு எரிபொருள் வருவது நின்றது”
“ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயு, கச்சா எண்ணெய் முதலானவை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; உணவகங்கள் மூடப்படுகின்றன; இந்தச் சூழ்நிலையை முன்னுணர்ந்து முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய ஒன்றிய அரசு மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம் என்று அவர் விமர்சித்துள்ளார்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை
பொதுமக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல், அரசியல் பொறுப்புணர்வோடு செயல்படாத ஒன்றிய பாஜக அரசின் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
“தட்டுப்பாடு ஏற்படும் என பலரும் எச்சரித்தனர்”
ஈரான் நாட்டை அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் தாக்குவதற்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்தபோதே, இந்தியாவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு போற்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பலரும் எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கைகளை மதிக்காமல் மோடி அரசு அலட்சியமாக இருந்தது. இப்போது வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு விநியோகம் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
உணவகங்கள் மூடப்படுகின்றன; மாணவர் விடுதிகளில் சிக்கல்!
இந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் ‘எஸ்மா சட்டத்தை’ ஒன்றிய பாஜக அரசு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்படுகின்றன. மாணவர் விடுதிகளில் உணவு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்கான சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ‘சில வாரங்களுக்கு கையிருப்பு உள்ளது’ என்று ஒன்றிய அரசு சொன்னாலும் பெரும்பாலான மாநிலங்களில் சிலிண்டர் விநியோகம் செய்ய முடியவில்லை. மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் சொல்லியிருக்கிறோம் என்று மோடி அரசு சொன்னாலும் அது உடனடியாக நடக்கப் போவதில்லை. இந்தக் குழப்பங்களுக்கு மோடி அரசின் கையாலாகத்தனமே காரணம்.
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தது போன்ற செயல்
கொரோனா வந்த போதும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போதும் இதே போலத்தான் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மோடி அரசு நடந்து கொண்டது. அதனால் கொரோனாவின்போது லட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இப்போதும் மோடி அரசு அதே போலத்தான் நடந்து கொள்கிறது.
“ஒளித்து வைத்துள்ள ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருந்து கொடுக்கவும்”
சோலார் மின்வசதி ஏற்படுத்திக்கொள்ள உணவகங்களுக்கு மானியம் வழங்கவேண்டும். தேவையான இடங்களில் மையப்படுத்தப்பட்ட சமையல்கூட வசதியை உருவாக்கி இலவசமாக உணவு வழங்கவேண்டும். இவற்றுக்கான நிதிச்சுமையை வழக்கம்போல மாநிலங்களின் தலையில் கட்டாமல் எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கும் ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
