சென்னை,மார்ச்.13; திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (கொமதேக) கடந்த தேர்தலில் சூலூர், தொண்டாமுத்தூர், நாமக்கல் ஆகிய மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, மூன்றிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு கூடுதல் பலம் சேர்த்தது.
திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
இதுபோன்ற சூழலில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
அதன்படி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட ஒரு இடம் குறைவாக 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று (மார்ச் 13, வெள்ளி) ஒப்பந்தம் கையெழுத்தானது.
கொமதேக உதயசூரியன் சின்னத்தில் போட்டி என்றும் அறிவிப்பு
இது தொடர்பாக திமுக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சர் ஸ்டாலினும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனும் இன்று (13-03-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசினர். அதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழ்நாட்டில் 2 (இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நல்லதொரு ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும்”
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு முடிவடைந்த பின்பு கொமதேக பொதுச்செயலாளர் கொங்கு ஈஸ்வரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். “கூட்டணியின் நலன் கருதியும், நல்லதொரு ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஓரிடத்தில் கூட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக இருந்தது எனக் கூறவில்லை” என்று தெரிவித்தார்.
