கோவா மாநிலம் அர்போராவில் உள்ள பிரபல இரவு விடுதியான ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ உணவகத்தில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்குக் காரணமான அந்த விடுதியின் உரிமையாளர்கள் கௌரவ் லுத்ரா மற்றும் சௌரப் லுத்ரா ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது கோவா போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளனர்.
தாய்லாந்தில் சிக்கிய உரிமையாளர்கள்
தீ விபத்து ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே லுத்ரா சகோதரர்கள் இந்தியாவிலிருந்து தப்பி தாய்லாந்திற்குச் சென்றனர். இதையடுத்து அவர்களுக்கு எதிராக ‘ப்ளூ கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டது. அவர்களின் பாஸ்போர்ட்டுகளும் ரத்து
செய்யப்பட்டன. இந்திய அரசின் தீவிர முயற்சியால், தாய்லாந்து அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டு, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
டெல்லியில் கைது மற்றும் மருத்துவப் பரிசோதனை
தாய்லாந்திலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கியவுடன், கோவா போலீசார் அவர்களை முறைப்படி கைது செய்தனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு இரண்டு நாட்கள் ‘டிரான்சிட் ரிமாண்ட்’ (Transit Remand) வழங்கப்பட்டது.
இன்று (புதன்கிழமை) காலை லுத்ரா சகோதரர்கள் டெல்லியிலிருந்து கோவாவிற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். கோவா விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன், அவர்கள் பலத்த பாதுகாப்புடன் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
25 பேரை பலிகொண்ட கொடூர வழக்கின் பின்னணி
இந்தத் தீ விபத்து தொடர்பாக அஞ்சுனா போலீசார் லுத்ரா சகோதரர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முறையான தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது. அனுமதி இன்றி ‘ஃபயர் ஷோ’ (Fire Show) நடத்தியது.
அவசரகால வெளியேற்ற வழிகள் இல்லாதது போன்றவை இவர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டுகளாகும்.
தற்போது கோவா அழைத்து வரப்பட்டுள்ள இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். இதன் மூலம் இந்த விபத்தில் உள்ள மற்ற குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் குறித்தும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
