Skip to content

“சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோ போட்டியிட வேண்டும்”; கட்சித் தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா?

சென்னை,மார்ச்.23; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒன்றில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது. கட்சியின் பதிவை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் களமிறங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வரும் தேர்தலில் மதிமுக 4 தொகுதிகளில் போட்டி

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் வெற்றி பெற்றது. ஆனால், இம்முறை கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வந்திருப்பதை காரணமாகக் கூறி, 4 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக விருப்பமான 10 தொகுதிகளின் பட்டியலை மதிமுகவினர் திமுகவிடம் கொடுத்துள்ளனர்.

இதுபோன்ற சூழலில் சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தனிச் சின்னத்தில் வைகோ போட்டியிட கட்சியினர் விருப்பம்

தனிச் சின்னத்தில் போட்டியிடும் தொகுதியில் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்தமும் மதிமுவுக்கு உள்ளது. எனவே, தனி சின்னத்தில் பிரபலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று மதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர். அந்த பிரபலமானவர் வைகோவாக இருக்க வேண்டும் என்பதும் கட்சியினரின் விருப்பமாக உள்ளது.

இறுதி முடிவை வைகோ எடுப்பார்; தொண்டர்கள்

இருப்பினும், இறுதி முடிவை வைகோ எடுப்பார் என்றும் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். கட்சி, 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை ஒருமுறை கூட சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோ போட்டியிட்டதில்லை. வாழ்நாளின் பெரும்பகுதியில் அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவே பதவி வகித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *