Skip to content

சட்டப்பேரவை தேர்தலில் மேயர் பிரியா போட்டி? சென்னை அரசியலில் அதிரடி திருப்பம்!

சென்னை,மார்ச்.02; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தற்போதே களமிறங்கிவிட்டன. தேர்தல் வியூகங்கள், தொகுதிப்பங்கீடு பேச்சு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காணுதல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுபோன்ற சூழலில் சென்னை மாநகர மேயர் ஆர். பிரியா, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் டூ எம்எல்ஏ; வளர்ந்து வரும் அரசியல் முகம்

சென்னை மாநகராட்சியின் இளம் மேயராகப் பொறுப்பேற்றது முதல், மக்கள் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் மேயர் பிரியா, திமுகவின் முக்கிய இளம் முகங்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மாநகராட்சி நிர்வாகத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் மழைக்கால மேலாண்மைப் பணிகள் பொதுமக்களிடையே அவருக்குப் போதிய நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.

எந்தத் தொகுதியில் போட்டி?

பெருநகர சென்னை மாநகராட்சியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு காலமே இருப்பதால், 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைமையிடம் வாய்ப்பு கோரி விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ள இவர்கள், சென்னையைச் சேர்ந்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோரிடம் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிகிறது.

துணை மேயர் மகேஷ்குமாரும் தேர்தலில் களம் காண்கிறார்?

இதேபோன்று துணை மேயர் மகேஷ்குமாரும் சட்டப்பேரவைத் தேர்தலில் களம்காண வாய்ப்பு கேட்டுள்ளார். மேயர் பிரியா ராஜன் திரு.வி.க. நகர் தொகுதியில், மகேஷ்குமார் வேளச்சேரி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு கேட்பதாகப் செய்திகள் உலா வருகின்றன.

திரு.வி.க. நகர் தொகுதியில், தற்போது எம்எல்ஏவாக இருக்கும் தாயகம் கவி, சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும், தனித் தொகுதி என்பதால் திரு.வி.க. நகரில் கடந்த 2 முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

பிரியா ராஜன், மகேஷ்குமாருக்கு கட்சித் தலைமை பச்சைக்கொடி!

ஆனால், இம்முறை திரு.வி.க. நகர் தொகுதி மேயர் பிரியாவுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. கட்சித் தலைமை இதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக, மேயர் பிரியாவும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இவர் தவிர, சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 5 பேருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என்று அண்ணா அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *