Skip to content

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலை மறுப்பு? அதிர்ச்சியில் உறைந்த ஆதரவாளர்கள்!

சென்னை,ஏப்.02; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணியில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேபோல் திமுக கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரசும் இதுவரை வேட்பாளர்களின் விவரங்களை அறிவிக்கவில்லை.

அண்ணாமலையின் அதிரடி முடிவு என்ன?

இதுபோன்ற சூழலில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து வெளியாகியிருக்கும் ஒரு தகவல் அக்கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எங்கு போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. டெல்லி மேலிடம் அவரை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல்கள் உலா வந்தன.

ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என்ற முடிவை அண்ணாமலை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

போட்டியில்லை, பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்யத்தயார்!

தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாக, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பரப்புரை செய்ய விரும்புவதாக அவர் கட்சி மேலிடத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் வெற்றிக்காகத் தேர்தல் களப்பணியில் முழுமையாக ஈடுபடவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி

அண்ணாமலை தேர்தலில் வென்று சட்டப்பேரவைக்குள் நுழைவார் என்று ஆவலோடு காத்திருந்த அவரது ஆதரவாளர்களுக்கு இந்தத் தகவல் பேரிடியாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் இப்போதே கிளம்பியுள்ளன. கட்சியின் முகமாகப் பார்க்கப்படும் ஒரு தலைவர் போட்டியிடாமல் இருப்பது தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அண்ணாமலையின் இந்த முடிவு பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கட்சியின் மேலிடம் இதனை ஏற்குமா அல்லது அவரைப் போட்டியிட வற்புறுத்துமா என்பது வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே உறுதியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *