Skip to content

சாதி, மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்துவர்கள்தான் ‘தீய சக்தி’: விஜய்க்கு வீரபாண்டியன் பதிலடி!

திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழ்நாடு அரசியல் சூழல் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

கூட்டணி குறித்த தெளிவு

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி குறித்து எழுந்த பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீரபாண்டியன் பதிலளித்தார். “தமிழ்நாட்டில் திமுக உடனான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி மிகவும் வலுவாகவும், இணக்கமாகவும் உள்ளது. இதில் எந்தவிதமான குழப்பமோ அல்லது விரிசலோ இல்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் ஒருமித்த கருத்து

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தக் கூட்டணி ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டிப்பதில் கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன; தமிழக உரிமைகளை மீட்டெடுப்பதில் தி.மு.க. அரசுக்கு இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன எனவும் வீரபாண்டியன் தெரிவித்தார்.

அரசியல் முக்கியத்துவம் கருதி கூட்டணி தொடர்வதாக கருத்து

எதிர்வரும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கொள்கை ரீதியான உடன்பாட்டின் அடிப்படையில் உருவான இந்தக் கூட்டணி, வரும் காலங்களிலும் தொடரும் என்பதை அவர் தனது பேட்டியின் மூலம் உறுதிப்படுத்தினார்.

ஏழைகளுக்கு வாழ்வு அளிக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் தொடுக்கக்கூடாது. இந்த திட்டத்தில் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். ஆனால் அதற்குரிய நிதியை ஒதுக்க வேண்டும்.

திமுகவை தீயசக்தி எனக்கூறும் விஜய்க்கு வீரபாண்டியன் பதிலடி

“நடிகர் விஜய் தி.மு.க.வை பலமுறை தீய சக்தி என்று கூறுகிறார்; சாதி, மதம் ரீதியாக நாட்டை யார் பிளவுபடுத்துகிறார்களோ, அவர்கள் தான் தீய சக்தி; மாறாக,

ஜனநாயக சக்தியான தி.மு.க.வை தீய சக்தி என்று சொல்வதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிராகரிக்கிறது; விஜய்யிடம் திட்டங்கள், கொள்கைகளை எதிர்பார்த்தோம், புதிய சிந்தனைகளை எதிர்பார்த்தோம், ஆனால் ஏமாற்றமே அளிக்கிறது என வீரபாண்டியன் குறிப்பிட்டார்.

காலிப்பணியிடங்கள்; வரும் 5ஆம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு

காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் நடக்கிறது. இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கிறது. வருகிற 26ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு மற்றும் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது என்றும் வீரபாண்டியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *