மதுரை,மார்ச்.23; தமிழ்நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 காவல்துறையினரும் குற்றவாளிகள் என்று மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இன்று (மார்ச் 23, 2026) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
பின்னணி; சாத்தான்குளத்தில் நடந்தது என்ன?
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் காவல்துறையினரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும், அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு
இந்த வழக்கினை சிபிஐ விசாரணை செய்து வந்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் பால்துரை விசாரணையின் போதே உயிரிழந்தார்.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தந்தை-மகன் இருவரும் விடிய விடியத் தாக்கப்பட்டதும், ரத்தக் கறைகளை அவர்களையே துடைக்கச் சொன்னதும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. மேலும், மாஜிஸ்திரேட் மற்றும் பெண் காவலர் ரேவதியின் சாட்சியங்கள் இந்த வழக்கில் திருப்புமுனையாக அமைந்தன.
அடித்துப்பழக அப்பா, மகன் கிடைத்துள்ளனர் எனப் பேசியுள்ளனர்: நீதிபதி
மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார். அதில்:
தந்தை, மகன் இருவருக்கும் மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உடலில் இருந்தன; ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது; காவல்துறையினரால் தான் அந்தக் காயங்கள் ஏற்பட்டது உறுதியாகி உள்ளது; அடித்துப் பழக அப்பா, மகன் கிடைத்துள்ளனர் என பேசியுள்ளனர்; இரவு முழுவதும் 10 நிமிடம் இடைவெளிவிட்டு தாக்கியுள்ளனர்; இதன் மூலம் இந்த வழக்கு கொலை தான் என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது என்று நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்தார்.
9 போலீசாரும் குற்றவாளிகள்; வரும் 30ஆம் தேதி தீர்ப்பு
காவல் ஆய்வாள் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
