மதுரை,ஏப்.06; தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலைய மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 6, 2026) அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி; என்ன நடந்தது?
கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா முழு முடக்க காலத்தில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர், அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் இருவரும் இரவு முழுவதும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலால் பலத்த காயமடைந்த இருவரும் அடுத்தடுத்த நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
5 ஆண்டுகால சட்டப் போராட்டம்
சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில், சுமார் 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில், அரசுத் தரப்பு மற்றும் மத்திய அரசின் அறிக்கைகளின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நீதிபதி முத்துக்குமரன் இன்று (ஏப்ரல் 6, 2026) தீர்ப்பு வழங்கினார்.
நீதிமன்றத்தின் முக்கிய கருத்துக்கள்
தீர்ப்பை வாசித்த நீதிபதி முத்துக்குமரன், இந்த வழக்கை “அரிதினும் அரிதான வழக்கு” என்று வகைப்படுத்தினார். அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:
இவ்வழக்கில் மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியே இல்லை என நீதிமன்றம் கருதுகிறது.
தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் தாக்கியுள்ளனர்.
வழக்கு விவரங்களை வாசிக்கும்போது மனம் பதைபதைக்கிறது.
இது போன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், காவல்துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது.
ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது போல குற்றம் நிகழா வகையில் தீர்ப்பிருக்க வேண்டுமென நீதிமன்றம் நினைக்கிறது.
பொருளாதார ரீதியான தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட போலீசாரில் யார் அதிகமாக அடித்தார்கள் என வேறுபாடு காட்ட இயலாது.
ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் என இருவர் மீதும் எந்த குற்ற பின்னணியும் இல்லை என்பதும் தெரிய வருகிறது. எனவே, மரண தண்டனையே பொருத்தமானது என்று நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்தார்.
யார் யாருக்கு தண்டனை?
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து வழக்கில் தொடர்புடைய மற்ற 8 காவலர்களுக்கும் தலா இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலப் போராட்டத்திற்கு கிடைத்த நீதி
நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைத்துள்ளது. “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்பதையும், சீருடை அணிந்தவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்பதையும் இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது. காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல்லாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
