சிட்னி, டிச.15; சிட்னியின் அடையாளமான போண்டி கடற்கரையில் (Bondi Beach) நடந்த கோரமான துப்பாக்கிச்சூடு சம்பவம், ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையும் உலுக்கியுள்ளது. யூதர்களின் ஹனுக்கா (Hanukkah) பண்டிகை கொண்டாட்டத்தின்போது நடந்த இந்தத் தாக்குதலில், 16 பேர் கொல்லப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் (NSW) காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு இலக்கு வைக்கப்பட்ட, யூத எதிர்ப்பு (Antisemitic) பயங்கரவாதச் செயல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போண்டி கடற்கரையில் யூதர்களை குறிவைத்து தாக்குதல்
நேற்று மாலை, சிட்னியின் பிரபல போண்டி கடற்கரையில் ‘Chanukah by the Sea’ என்ற யூதர்களின் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. குடும்பங்கள், குழந்தைகள் எனப் பல நூறு பேர் கூடியிருந்த இந்த இடத்தில், சுமார் 6:45 மணியளவில் துப்பாக்கி ஏந்திய இரண்டு பேர் கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினர்.
கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு நடைபாதையில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்த இந்தத் தாக்குதலில், 10 வயதுச் சிறுமி உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) ‘தீய’ (act of pure evil) மற்றும் “பயங்கரவாதச் செயல்” என்று கண்டித்துள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்கள் தந்தை,மகன்
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் 50 வயதான சஜித் அக்ரம் (Sajid Akram) மற்றும் அவரது 24 வயதான மகன் நவீத் அக்ரம் (Naveed Akram) என்று நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
50 வயது நிரம்பிய சஜித் அக்ரம், சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு பழக்கடை உரிமையாளரான சஜித், துப்பாக்கி உரிமம் பெற்றவர் என்பதுடன், சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்தார் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.
தந்தை சுட்டுக்கொலை, மகன் காயங்களுடன் பிடிபட்டார்
சஜித் அக்ரமின் மகனான நவீத் அக்ரம், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, இருவரும் தங்கள் குடும்பத்தினரிடம் தாங்கள் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறிச் சென்றதும், இவர்களின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் (IEDs) கண்டுபிடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கோரச் சம்பவத்தின்போது, மக்கள் பீதியில் சிதறி ஓடியபோது, சிலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களைக் காப்பாற்றியது தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டின் போது துணிச்சலாக சிலரை காப்பாற்றிய நபர்
அவர்களில் அஹ்மத் அல் அஹ்மத் (Ahmed al Ahmed) என்ற துணிச்சல் மிக்க நபர், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரைப் பிடித்து, அவரது ஆயுதத்தைப் பறிமுதல் செய்தார். அவரது இந்தச் செயல், மேலும் பல உயிர்களைக் காத்ததாகப் பாராட்டப்பட்டு, அவருக்கு “உண்மையான ஹீரோ” என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் விசாரணையில், இந்தத் தாக்குதலில் வேறு எவருக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய மண்ணில் யூத சமூகத்தை இலக்காக வைத்து நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று ஆஸ்திரேலிய உளவுத்துறையும் காவல்துறையும் அறிவித்துள்ளன.
போண்டிபயங்கரவாதம், Bondibeachattack, சிட்னிதாக்குதல், Sydneyterror, Fathersonaccused, fatherkilled, தந்தைசுட்டுக்கொலை
