சென்னை,மார்ச்.10; சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கையிருப்பு குறித்து மாநில அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
பின்னணி என்ன?
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ள நிலையில், இது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கை
இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது எவ்வளவு கேஸ் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன? மற்றும் மாநிலத்தின் தினசரி தேவை எவ்வளவு? என்பது குறித்த முழுமையான விவரங்களை இன்று (மார்ச் 10) மதியத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டது.
20 நாட்களுக்கு தேவையான சிலிண்டர்கள் உள்ளதாக பதில்
இதன் தொடர்ச்சியாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில், மாநிலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர்களில் மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ள BPCL நிறுவனம், கையிருப்பில் உள்ள சிலிண்டர்களை மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்களில் உள்ள உணவகங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மாநிலத்தில் அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்தத் தரவு சேகரிப்பு நடவடிக்கை, தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்
ஏற்கனவே மத்திய அரசு சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரித்துள்ளது. ஒரு குடும்பம் ஆண்டுக்கு சராசரியாக 8 சிலிண்டர்கள் மட்டுமே பயன்படுத்துவதால், செயற்கையான தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், பதுக்கலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை
சர்வதேச அரசியல் சூழல் எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
