காரைக்குடி,ஜன.30; சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (ஜனவரி 30) நாளையும் (ஜனவரி 31) கள ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறார்.
இதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து காரில் பயணித்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்குச் செல்கிறார். அதன் அருகே சிராவயல்புதூரில் விடுதலைப் போராட்டத்தின்போது தேசப்பிதா காந்தியடிகள், தோழர் ஜீவா ஆகியோர் சந்தித்த இடத்தில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார்.
குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார் மு.க.ஸ்டாலின்
பின்னர் இரவு 7.15 மணிக்கு காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து இரவு 8 மணிக்கு காரைக்குடியில், திருச்சி புறவழிச்சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருக்கும் வீறுகவியரசர் முடியரசனார் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு காரைக்குடி அழகப்பா அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
காரைக்குடியில் வேளாண், சட்டக்கல்லூரியை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்
பின்னர் நாளை காலை 9.30 மணிக்கு காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். பின்னர் காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் நிறைவு பெற்ற பணிகளை தொடங்கிவைத்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரை நிகழ்த்துகிறார். பின்னர் சட்டக்கல்லூரி அருகே புதிதாக கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். பிறகு 11.30 மணிக்கு காரைக்குடியிலிருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டுச் செல்கிறார்.