சென்னை,ஜன.28; தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் இறங்கிவிட்டன.
தொகுதிப்பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், வியூகம் வகுத்தல், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காணுதல் என தேர்தல் களத்தில் சூடுபறக்கிறது.
நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்ப்பு
இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்ற நிலை தற்போது வரை நிலவுகிறது.
திமுக தனது கூட்டணியை கடந்த தேர்தலில் (2021) இருந்ததுபோன்றே வலுவாக வைத்துள்ளது. தற்போது, கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கைகோர்த்துள்ளது. அதிமுக-வைப் பொறுத்தவரை மத்தியில் ஆளுங்கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
அதிமுக கூட்டணிக்கு தேமுதிகவை இழுக்க பேச்சு?
இந்தக் கூட்டணியில், பாமக (அன்புமணி அணி), தமாகா, அமமுக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சியை இணைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
திமுக கூட்டணிக்கு ராமதாஸின் பாமக அணி வந்தால் 4 தொகுதிகளும், தேமுதிக வந்தால் 6 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ராமதாஸ் திமுக அணிக்கு செல்லவில்லை என காட்டிவிட்டார்!
ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று திமுக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அவர் செல்லவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
தேமுதிக இன்னும் கூட்டணி முடிவை எடுக்காத நிலையில், அக்கட்சியினரிடம் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருவதாகத் தெரிகிறது.
கூட்டணி கதவை திறந்து வைத்திருந்தும் யாரும் அணுகவில்லை!
இந்த நிலையில், “ஆட்சியில் பங்கு தருவோம்” என்ற வாக்குறுதியுடன் கூட்டணி கதவை திறந்து வைத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தை இதுவரை யாரும் அணுகவில்லை. இதனால் , “வீட்டுக்கு ஒரு ஓட்டு” என்று கணக்குப் போட்ட த.வெ.க. தலைமை, 40 சதவீத வாக்குகள் வரை கிடைக்கும் என நம்புகிறது.
தேர்தலில் தோற்றால்…விஜய்யை எச்சரித்த நண்பர்கள்
இந்தக் கணக்கையே கட்சியின் தலைவர் விஜய்யிடமும் நிர்வாகிகள் கூறினார்களாம். ஏற்கனவே, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணை, தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் கடைசி படமான ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல் என விஜய்யின் தலைக்கு மேல் ‘கத்தி’ தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதுபோன்ற சூழலில், தேர்தலில் தோற்றால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என விஜய்க்கு நெருக்கமானவர்கள் அவரிடம் எடுத்துக்கூறி வருகின்றனர்.
திரைத்துறை நண்பர் மூலம் சீமானுக்கு தூது?
இதனால், நடிகர் விஜய் புதிய முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, நாம் தமிழர் கட்சியின் சீமானுடன் கூட்டணி வைத்தால் என்னவென்று? விஜய் யோசித்துள்ளார். ஆனால், சீமான் தனித்துப் போட்டி என்றே கூறி் வருகிறார், அவரை அணுகுவது சரியாக இருக்குமா? என விஜய் தயங்கி உள்ளார்.
கைகள் இணைந்தால் வெற்றி கிட்டுமே!
ஆனாலும், தனது நெருங்கிய திரைத்துறை நண்பர் ஒருவர் மூலமாக சீமானிடம் கூட்டணிக்கு விஜய் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. “நாம் இருவரும் தனித்தனியாக நின்றால், கணிசமான வாக்குகளைத்தான் பெற முடியும். தேர்தலில் வெற்றி வாகை சூட வேண்டும் என்றால், இருவரும் இணைந்த கைகளானால் மட்டுமே அது சாத்தியம்” என்று சீமானிடம் விஜய் கூறியதாக தெரிகிறது.
இதற்கு சீமான் உடனடியாக பதில் எதுவும் சொல்லவில்லை என்றபோதிலும், விஜய் கூறிய யோசனை குறித்து யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்.
தனித்தே களம் காணுமாறு சீமானுக்கு அழுத்தம்!
அதேசமயம், தேர்தலில் தனித்தே களம் காணுமாறு சீமானிடம் ஆளுங்கட்சி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்களில் பேசிக் கொள்கின்றனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தமட்டில் நான்கு முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மும்முனைப் போட்டியாக குறைந்தால், அதாவது விஜய்-சீமான் கைகோர்த்தால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அத்துடன் தவெக கூட்டணியில் ராமதாஸின் பாமக அணி, ஓபிஎஸ், தேமுதிக ஆகியவற்றை இணைக்கவும் தூதுவிடப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
2 கோடி ஓட்டு கணக்கு என்னவானது? தடம் புரள்வது ஏன்?
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைகளை வைத்து வாக்குகளை கணக்குப் போட்ட தவெக தற்போது தடம்புரள்வது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
இரண்டே கால் கோடி குடும்ப அட்டைகளில், வீ்ட்டுக்கு ஒரு ஓட்டு என இரண்டு கோடி வாக்குகள் கிடைத்தாலும் 40 விழுக்காட்டிற்கும் மேல் வாக்கு கிடைக்கும், ஆட்சியில் அமர்ந்துவிடலாம் என்றெல்லாம் யோசித்த தவெக தற்போது ஏன் கூட்டணி குறித்து கணக்குப் போடுகிறது? என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் அரசியலை அலசுவோர்.