கிரான்ஸ்-மோன்டானா, ஜன.02; சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிரான்ஸ்-மோன்டானா (Crans-Montana) பகுதியில், குளிர்கால பொழுதுபோக்கு மையமாகத் திகழும் ஒரு மதுக்கடையில் (Bar) ஏற்பட்ட கோரத் தீ விபத்தில், சுமார் 40 பேர் உயிரிழந்தனர். 115 பேர் காயமடைந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
விபத்து நிகழ்ந்தது எப்படி?
புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில் ‘லீ கான்ஸ்டலேஷன் (Le Costllation) என்ற மதுக்கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். திடீரென ஏற்பட்ட வெடிப்புச் சத்தத்தைத் தொடர்ந்து கட்டடம் முழுவதும் தீ பரவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீட்புப் பணிகள் மற்றும் உயிரிழப்புகள்
வாலைஸ் (Valais) மாகாண போலீஸ் தளபதி பிரடெரிக் கிஸ்லர் கூறுகையில், “தற்போது வரை சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 115 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
விபத்து நடந்தவுடன் 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் 40 ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.
தீ விபத்திற்கான காரணம் என்ன?
முதற்கட்ட விசாரணையில், மதுக்கடைக்குள் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் அல்லது வாணவேடிக்கை பொருட்கள் (Pyrotechnics) இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்தின் தீவிரத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தலைவர்கள் இரங்கல்
சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் இந்த விபத்தை “நாட்டின் மிக மோசமான சோகங்களில் ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் இந்தச் சம்பவத்திற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு விதிமுறைகளின் அவசியத்தை மீண்டும் உணர்த்திய பயங்கரம்
சுற்றுலாப் பயணிகளால் எப்போதும் களைகட்டும் கிரான்ஸ்-மோண்டானா பகுதி தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த ஸ்கை ரிசார்ட்டில் நிகழ்ந்த இந்த விபத்து, பொது இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
