Skip to content

சென்னை அண்ணா நகரில் பயங்கரம்; பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் புகை மூட்டம்!


சென்னை,டிச.29;
சென்னை அண்ணா நகரில் உள்ள பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய இரும்பு கிடங்கில் பற்றிய தீ

சென்னை அண்ணா நகர், ‘O’ பிளாக், முதல் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவு சேமிப்பு கிடங்கில், ஞாயிற்றுக்கிழமை (28.12.2025) இரவு சுமார் 7.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகள் அதிகளவில் இருந்ததால், தீ மளமளவென அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவியது.

திணறிய தீயணைப்பு வீரர்கள்

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அண்ணா நகர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டனர். அண்ணா நகர், அம்பத்தூர், கோயம்பேடு மற்றும் புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 7-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், கிடங்கில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட பொதுமக்கள்

தீ விபத்தின் காரணமாக அண்ணா நகர் ‘O’ பிளாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் கழிவுகள் சேமிப்பு

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அண்ணா நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கழிவுகளைச் சேமித்து வைப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்த விபத்து ஒரு சான்றாகும்.

இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, கழிவு மேலாண்மை நிலையங்களில் உரிய தீ பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *